ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போராட்டம்.. கொதித்தெழுந்த பாலஸ்தீனியர்கள்
காசா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர் உடனடியாக பதவியை விட்டு விலக வலியுறுத்தி ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்ரேல்-காசா இடையே கடந்த 15 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த போரில் காசா பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-காசா இடையேயான போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா, கத்தார், எகிப்து போன்ற நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு இஸ்ரேல்-காசா இடையே இடைக்கால போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதில், ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட இஸ்ரேலியர்கள் சிலரை அவர்கள் விடுதலை செய்தனர். தொடர்ந்து, காசாவிற்கு மனிதாபிமான உதவிகளும் சென்றடைந்தது.
இந்த இரண்டு மாத போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலில் 700 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில், குழந்தைகள், பெண்கள் உட்பட 400 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போராட்டம்
இந்நிலையில், காசா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர் உடனடியாக பதவியை விட்டு விலக வலியுறுத்தி ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதாவது, வடக்கு காசாவின் பெய்ட் லாஹியா (Beit Lahia) பகுதியில் திரண்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ’போரை நிறுத்துங்கள்.. எங்களுக்கு அமைதி வேண்டும்’ என ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஹமாஸ் அமைப்பினர் துப்பாக்கி மற்றும் தடிகளால் விரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் கூறுகையில், “ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக டெலிகிராம் (Telegram) என்ற சமூக வலைதளத்தின் மூலம் லிங்க் அனுப்பப்பட்டது. இது யார் நடத்தினார்கள் என்று எனக்கு தெரியாது.
போரினால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்காக இதில் பங்கேற்றேன். ஹமாஸ் அமைப்பினர் அதிகாரத்தில் இருந்து விலகினால் மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றால் மக்களை பாதுகாப்பதற்காக அவர்கள் பதவியில் இருந்து விலகலாமே” என்று கூறினார்.
Read more:
கொன்று குவிக்கப்பட்ட 700 பாலஸ்தீனியர்கள்.. எகிப்து பரிந்துரையை ஏற்குமா இஸ்ரேல்?
What's Your Reaction?






