நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்.. பள்ளி விடுதியில் தீப்பிடித்து 17 குழந்தைகள் உயிரிழப்பு!
இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ, ''இது ஒரு மோசமான செய்தி. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.
நைரோபி: கென்யாவில் உள்ள பள்ளி விடுதியில் தீப்பிடித்து 17 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். நெஞ்சை உறைய வைக்கும் இந்த சம்பவம் குறித்து விரிவாக காண்போம். கென்யா நாட்டில் தலைநகர் நைரோபியில் இருந்து 170 கிமீ தொலைவில் உள்ள நைரி என்ற பகுதியில் Hillside Endarasha Academy என்ற பிரைமரி பள்ளி செய்லபட்டு வருகிறது.
இந்த பள்ளியில் மாணவர்கள் தங்குவதற்கான விடுதியும் உள்ளன. இந்த விடுதியில் 5 முதல் 12 வயதுடைய 800க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி இருந்தனர். நேற்று நள்ளிரவில் குழந்தைகள் அனைவரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீப்பிடித்தது. ஒரு அறையில் தீப்பிடித்த நிலையில், மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியது.
இதனால் அங்கு இருந்த குழந்தைகள் தீயின் பிடியில் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயின் கோரப்பிடியில் சிக்கி 17 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இது குறித்து பேசிய தேசிய காவல்துறை செய்தி தொடர்பாளர் ரெசிலா ஒன்யாங்கோ, ''தீயின் கோரப்பிடியில் சிக்கி 17 குழந்தைகள் பலியானது வருத்தம் அளிக்கிறது. பலியானவர்களில் பெரும்பாலானோர் 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது'' என்றார்.
இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ, ''இது ஒரு மோசமான செய்தி. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?