சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப நாள் குறித்த நாசா.. வெளியான தகவல்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் மார்ச் மாதம் பூமிக்கு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் நாசா சார்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்வெளிக்கு அனுப்பட்டனர். இவர்கள் போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர்.
எட்டு நாட்கள் பயணமாக விண்வெளி நிலையத்திற்கு சென்றவர்கள் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாத கணக்கில் அங்கு சிக்கி தவித்து வருகின்றனர். இவர்களை மீட்பதற்காக நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: விண்வெளியில் கிறிஸ்துமஸ் விழா.. சுனிதா எப்போது வருவார்..? நெட்டிசன்கள் கேள்வி
ஆனால், தற்போது அவர்கள் அறிவித்த தேதிக்கு முன்னரே பூமிக்கு திரும்ப உள்ளனர். அதாவது, மார்ச் 12-ம் தேதி விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு திருப்பி அழைத்து வர நாசா திட்டமிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 12-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் க்ரூ-10 டிராகன் விண்கலம் மூலம் இருவரும் பூமிக்கு அழைத்துவரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே விண்வெளியில் அதிக நேரம் நடைபயணம் செய்த பெண் என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார். விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 5 மணி நேரம் 26 நிமிடங்கள் விண்வெளியில் நடந்துள்ளார். 9-வது முறையாக விண்வெளியில் நடந்துள்ள சுனிதா வில்லியம்ஸ் இதுவரை விண்வெளியில் மட்டும் 62 மணி நேரம் 6 நிமிடங்கள் நடந்திருக்கிறார்.
மேலும் படிக்க: சிறுநீரை பயன்படுத்தும் சுனிதா வில்லியம்ஸ்.. பீட்சா, சிக்கன் சாப்பிடுவதாக அறிவிப்பு
புட்ச் வில்மோருக்கு இது ஐந்தாவது நடைபயணமாகும். முன்னதாக, கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் இருந்தவாறே வாக்களித்தார். அதுமட்டுமல்லாமல், தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோவை நாசா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






