ரத்த தானம்.. பல உயிர்களை காக்க உதவும்.. தைரியமாக ரத்தம் கொடுங்க..டாக்டர் உமா மகேஸ்வரன்

Dr Uma Maheswaran on Blood Donation : ரத்தம் கொடுப்பதற்கு முன்னர், ரத்தப் பிரிவு, ரத்த அழுத்தத்தின் அளவு, உடலின் வெப்பநிலை மற்றும் ஹீமோகுளோபின் போன்றவை பரிசோதிக்கப்படும்.

Jul 25, 2024 - 16:44
Jul 26, 2024 - 10:00
 0
ரத்த தானம்.. பல உயிர்களை காக்க உதவும்.. தைரியமாக ரத்தம் கொடுங்க..டாக்டர் உமா மகேஸ்வரன்
Blood Donation importance and benefits

Dr Uma Maheswaran on Blood Donation : நீரின்றி அமையாது உலகு என்பதைப்போல ரத்தமின்றி செயல்படாது மனித உடல். நம் உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்க ரத்தம் அவசியம். ஆக்சிஜனை அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்துச்செல்லும் மெட்ரோ ரயில். ஆக, உடலின் அனைத்துமாக ஆக நம் ரத்தம் இருக்கிறது.  ரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள், யார் செய்யலாம், யார் செய்யக் கூடாது என விபரமாக விளக்கம் அளித்துள்ளார் ரத்த வங்கி அலுவலர் டாக்டர் E.உமா மகேஸ்வரன்.

ரத்த தானத்தின் அவசியம்:

மனித உடம்பில் திரவ வடிவடித்தில் உள்ள ரத்தம் நமது இதயத்தின் மூலம் உடலின் அனைத்து பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது
தானங்களில் எத்தனையோ வகை உள்ளன. பசித்தவர்களுக்கு உணவு வழங்குவது அன்னதானம், ஏழைகளுக்கு ஆடைகள் கொடுப்பது ஆடை தானம். பலவகை தானங்கள் இருந்தாலும் தானங்களில் சிறந்த தானம் ரத்த தானம். நமது உடம்பில் உள்ள அனைத்து பொருட்களும் இயங்கத் தேவையானது ரத்தம். ரத்தம் தேவைப்படுவோருக்கு தானம் கொடுப்பதன் மூலம் ஒரு உயிரை காக்கலாம்.

யார் ரத்த தானம் செய்யலாம்:

ரத்தம் மனித உடலில் தானான ஊறக்கூடியது.ரத்த தானம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் 45 கிலோவுக்கு மேல், 18 முதல் 60 வயது வரை உள்ள அனைவரும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம். அரசு ரத்த வங்கிகள், அனுமதி பெற்ற தனியார் ரத்த வங்கிகளில் ரத்த தானம் செய்ய வேண்டும். மனித உடலில் 5 லிட்டர் ரத்தம் உள்ள நிலையில் 350 மிலி ரத்தம் தானமாக கொடுக்கலாம்.

ரத்த தானத்தால் என்ன நன்மை:

ரத்த தானம் செய்வதால் நம்முடைய உடலில் இயற்கையாகப் புதிய ரத்தம் உற்பத்தியாகும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க உதவும். உடலில் அதிக அளவில் உள்ள இரும்புச்சத்து சமன் செய்யப்படும். ரத்த தானம் செய்ய விரும்புபவர்கள், மது மற்றும் புகைப்பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது. புகைப் பழக்கம் உள்ளவர்கள், புகைபிடித்து மூன்று மணி நேரத்துக்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம்.எப்போதாவது மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் ரத்த தானம் கொடுப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு வரை மது அருந்தக்கூடாது. 

யார் ரத்த தானம் செய்யக்கூடாது:

18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள், 45 கிலோவிற்கு கீழ் எடை உள்ளவர்கள், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது.
ஏதேனும் தொற்றுநோய் உள்ளவர்கள், காய்ச்சலில் இருப்பவர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் செய்யக் கூடாது. நீரிழிவு, ரத்தக்கொதிப்பு நோய் உள்ளவர்கள் ரத்த தானம் கண்டிப்பாக செய்யக்கூடாது. வலிப்பு நோய், டெங்கு, மலேரியா, டைஃபாய்டு, ஹெப்படைட்டிஸ், எச்.ஐ.வி., எய்ட்ஸ் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது. குடிக்கு அடிமையானவர்கள் கண்டிப்பாக ரத்த தானம் செய்யக்கூடாது. 

பயனுள்ள வாழ்க்கை: 

அதே போல அறுவை சிகிச்சை செய்தவர்கள் கண்டிப்பாக ரத்த தானம் செய்யக்கூடாது. மாதவிடாய்க் காலங்களிலும் கர்ப்பிணிப் பெண்களும் ரத்த தானம் செய்யக் கூடாது.அதே போல பாலூட்டும் தாய்மார்கள் ரத்த தானம் செய்யக்கூடாது. ரத்த தானம் செய்தவர்கள் 24 நேரத்திற்கு மது அருந்தவோ, புகை பிடிக்கவோ கூடாது என்றும் டாக்டர் உமா மகேஸ்வரன் கூறியுள்ளார்.சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சில நாட்கள் ஓய்விற்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம்.ஆரோக்கியமாக உள்ளவர்கள் பிறந்தநாள், திருமண நாள் போன்ற முக்கியமான நிகழ்வுகளில் ரத்த தானம் செய்வதன் மூலம் அந்த நாட்களை அர்த்தமுள்ளதாக மாற்றலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow