கிருஷ்ணகிரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. சிறுமிகளை சீரழித்த நாதக நிர்வாகியின் காலில் மாவு கட்டு

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த நாம் தமிழர் கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Aug 19, 2024 - 10:07
 0
கிருஷ்ணகிரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. சிறுமிகளை சீரழித்த நாதக நிர்வாகியின் காலில் மாவு கட்டு
Krishnagiri rape case


கிருஷ்ணகிரி அருகே 12 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் உள்ளிட்ட 8 பேர் அதிரடியாக போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்த சிவராமன், பாலியல் வழக்கில் தேடப்பட்டதால் அக்கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.


கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை பள்ளி மாணவிகளுக்கான என்சிசி பயிற்சி நடைபெற்றது. இதற்காக, 17 மாணவிகள் பள்ளியிலே தங்கி பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகியான சிவராமன் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.

இந்நிலையில், இரவு நேரங்களில் மாணவிகளை மிரட்டி சிவராமன் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, 12 வயது சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, இந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது. அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. பள்ளியில் தங்கியிருந்த 17 மாணவிகளில் 13 பேர் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

மேலும் பள்ளி முதல்வரிடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் தெரிவித்த போதும், அதனை பெரிதுப்படுத்த வேண்டாம் என அவர் அலட்சியப்படுத்தியதாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், தாளாளர் வெஸ்லி, ஆசிரியர்கள் ஜெனிபர், சக்திவேல் மற்றும் சிந்து, சத்யா, சுப்பிரமணி ஆகிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவான முக்கிய குற்றவாளியான சிவராமன் மற்றும் சுதாகரை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இதனிடையே இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்த சிவராமன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து தலைமறைவாக இருந்த சிவராமனை போலீசார் 4 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் கோவையில் பதுங்கியிருந்த சிவராமனை போலீசார் கைது செய்தனர்.

அப்போது சிவராமன் போலீசாரிடமிருந்து தப்ப முயன்றபோது தடுமாறி விழுந்ததால் அவரது வலது காலில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போது நாதக முன்னாள் நிர்வாகி சிவராமன், பள்ளியின் முதல்வர் சதீஷ் குமார், தாளாளர், பயிற்சியாளர் உள்ளிட்ட 8 பேர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow