எடப்பாடி பழனிசாமியை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது?.. ‘காந்தாரி’ போலக் கதறுகிறார் - ஆ.ராசா சாடல்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு சிறப்பிப்பதில் என்ன பிரச்சினை எடப்பாடி பழனிசாமிக்கு என்று திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

Aug 18, 2024 - 21:59
Aug 18, 2024 - 22:01
 0
எடப்பாடி பழனிசாமியை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது?.. ‘காந்தாரி’ போலக் கதறுகிறார் - ஆ.ராசா சாடல்
எடப்பாடி பழனிசாமிக்கு என்ன பிரச்சினை என்று திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி

இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், கலைஞர் நிணைவு நாணயத்தை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நினைவு நாணயத்தை வெளியிட, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டர்.

இதற்கிடையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “கலைஞர் நூற்றாண்டு விழா நாணய வெளியிட்டு விழாவில், பாஜக பங்கேற்க வேண்டுமென்றால், ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்து முதல்வர் பங்கேற்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்த நிர்ப்பந்தமே முதல்வர் தேநீர் விருந்தில் பங்கேற்றதற்கான காரணம். இதன் மூலம் திமுகவின் இரட்டை வேடம் வெளிப்பட்டுள்ளது. தமிழ்.. தமிழ்.. என்று முரசு கொட்டும் திமுக, 100 ரூபாய் நாணயத்தில் ஹிந்தி மொழி பொறித்ததற்க்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பதிலளித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள ஆ.ராசா, “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் இந்திய மத்திய அரசு 100 ரூபாய் நாணயம் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறது. இந்த விழாவுக்கு ராஜ்நாத் சிங் ஏன் வருகிறார், ராகுல்காந்தியை ஏன் எதற்கும் அழைப்பதில்லை என்று அவர் எடப்பாடி பழனிசாமி கேட்டிருக்கிறார். இந்தியாவில் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது மத்திய அரசுதான் என்பதால், மத்திய அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு சிறப்பிப்பதில் என்ன பிரச்சினை எடப்பாடி பழனிசாமிக்கு?

கலைஞரின் உருவம் பொறித்த நாணயத்தில் இந்தி எழுத்து ஏன் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கேட்பதால் அவருக்கு என்ன ஆச்சு என்ற கவலை மேலும் அதிகரிக்கிறது. இந்தியாவில் உள்ள நாணயங்கள் எதுவாக இருந்தாலும் அதில் ஆங்கிலமும் இந்தியும் இருப்பது வழக்கம். அதிமுகவை உருவாக்கிய எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நாணயம் வெளியிடப்பட்டிருப்பதையும் அதிலும் இந்தி எழுத்துகள் இருப்பதையும்கூடவா எடப்பாடி பழனிசாமி அறியவில்லை? முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள நாணயத்தில்தான் ‘தமிழ் வெல்லும்‘ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது. இதைக்கூட உணராமல் எடப்பாடி பழனிசாமி உளறியிருப்பதால் அவரை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது எனப் புரியவில்லை.  

எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு நிறுவப்பட்ட சிலையை, பாஜக தலைவராக ஒரு காலத்தில் இருந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்ததை இப்போது விமர்சிக்கிற எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்ட கலைஞர் சிலையைத் திறந்து வைத்தது காங்கிரஸ் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்திதான் என்பதையாவது அறிவாரா?

உறவுக்கு கை கொடுப்போம்-உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதே முத்தமிழறிஞர் கலைஞர் எங்களுக்கு கற்றுத் தந்திருக்கும் அரசியல் இலக்கணம். அந்த வகையில்தான் மத்திய அரசின் நாணயம் வெளியீட்டு விழாவும், ஆளுநரின் தேநீர் விருந்தும் நடைபெற்றது. திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்குரிய நிதியை வழங்காமலும், தமிழ்நாட்டிற்கானத் திட்டங்களை செயல்படுத்தாமலும் வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஒருமுறையாவது படித்துப் பார்க்கட்டும்.  

ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அதில் உறுதியாக இருக்கின்ற இயக்கம் திமுக என்பதை, இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையாரே முத்தமிழறிஞர் கலைஞரின் தலைமைப் பண்பு குறித்து பாராட்டியிருக்கிறார். அதே தலைமைப் பண்பையும் பக்குவமான அணுகுமுறையையும் தமிழ்நாடு முதலமைச்சரிடம் = நிறைந்திருக்கிறது. அதிமுகவைப் போல பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. பாஜகவை எப்படியாவது தமிழ்நாட்டில் வளரச் செய்ய வேண்டும் என்று சொந்தக் கட்சியான அதிமுகவையே அழித்துக்கொண்டு இருக்கிறார் என்று அவரது கட்சித் தொண்டர்களே குமுறுகின்ற நிலையை மறைப்பதற்கு, திமுக மீது பழி போட்டுத் திசை திருப்ப நினைக்கும் எடப்பாடி பழனிசாமியின் நாடகத்தை பொதுமக்கள் நம்பமாட்டார்கள்.

கருணாநிதியை இந்தியாவே கொண்டாடுவதையும், மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்காலக் கனவை திராவிட மாடல் அரசு நிறைவேற்றியிருப்பதையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் ‘காந்தாரி’ போலக் கதறுகிறார் எடப்பாடி பழனிசாமி. பதற்றத்தில் அவர் பேசுவதெல்லாம் பிதற்றலாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow