சென்னை: ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தங்கலான் திரைப்படம் சுதந்திர தின ஸ்பெஷலாக ஆக 15ம் தேதி வெளியானது. விக்ரம் உடன் பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர், ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். முதல் நாளில் இருந்தே தங்கலான் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி புதிய முயற்சியாக தங்கலான் படத்தை இயக்கியிருந்தார் பா ரஞ்சித். இதனால் தங்கலான் அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
அதேநேரம் பா ரஞ்சித்தின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்திருந்தனர். தங்கலான் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சினிமா என்றும், பா ரஞ்சித்தின் திரைமொழி, மேக்கிங் புதிய அனுபவமாக இருந்தது எனவும் கூறியிருந்தனர். அதேபோல் சீயான் விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா ஆகியோரின் நடிப்பும், ஜிவி பிரகாஷின் இசைக்கும் ரசிகர்களிடம் மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்நிலையில், கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் தங்கலான் படத்தின் கலெக்ஷன் தரமாக இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படம் முதல் நாளில் 26 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் 20 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்பட்டது. வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் பாக்ஸ் ஆபிஸில் தங்கலானுக்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது.
மேலும் படிக்க - விஜய்கிட்ட அரசியல் பேசமாட்டேன்
அதன்படி, தங்கலான் திரைப்படம் முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 53.64 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஞாயிற்றுக் கிழமையான நேற்றும் தங்கலான் வசூல் மோசமாக இல்லை என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, முதல் வாரத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று, தங்கலான் 15 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் தங்கலான் இதுவரை 65 முதல் 70 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் தங்கலான் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு வெளியான தமிழ்ப் படங்களில் அரண்மனை 4, மகாராஜா, ராயன் படங்கள் மட்டுமே இதுவரை 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளன. அந்த வரிசையில் தங்கலான் இடம் பிடிக்கும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே தங்கலான் படத்திற்கு ஸ்க்ரீன்கள் குறைக்கப்பட்டு, டிமான்டி காலனி 2ம் பாகத்துக்கு அதிக ஸ்க்ரீன்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.