மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கேன்சல்..அவசர செயற்குழு கூட்டத்திற்கு இபிஎஸ் அழைப்பு.. பின்னணி என்ன?

அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்ற கோரிக்கையோடு அதிமுகவில் மாஜி அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ரத்து செய்த எடப்பாடி பழனிச்சாமி வரும் 16ஆம் தேதி அவசர செயற்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Aug 7, 2024 - 14:44
Aug 8, 2024 - 16:08
 0
மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கேன்சல்..அவசர செயற்குழு கூட்டத்திற்கு இபிஎஸ் அழைப்பு.. பின்னணி என்ன?
Edappadi Palanisamy admk

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. ஆட்சியை தக்கவைக்க எடப்பாடி பழனிச்சாமியும் ஒ.பன்னீர் செல்வமும் இணைந்து  இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டனர். டிடிவி தினகரன் அமமுக என்ற கட்சியை தொடங்கவே பலர் அவரது பின்னால் சென்றனர். டிடிவி தினகரனை நம்பி பிரயோஜனம் இல்லை என்று நினைத்தவர்கள் திமுகவில் இணைந்தனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்லவே அவரை ஓரங்கட்டிய 
ஒபிஎஸ், ஈபிஎஸ் தனி ஆவர்த்தனம் நடத்தினர். எல்லாமே அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் வரை மட்டும்தான். 

2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதிமுக ஆட்சியை இழந்தாலும் கணிசமான அளவில் எம்எல்ஏக்களை பெற்று வலிமையான எதிர்கட்சியாக சட்டசபைக்குள் நுழைந்தது. எதிர்கட்சித்தலைவரானார் எடப்பாடி பழனிச்சாமி. எதிர்கட்சித்துணைத்தலைவரானார் ஓ.பன்னீர் செல்வம். 2022ஆம் ஆண்டு ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமானது. அதன்பிறகு அதிமுகவில் பிரச்சினை ஏற்படவே ஓ.பன்னீர் செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டனர். கட்சியின் பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிச்சாமி. 

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்றதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் தொடர் தோல்வி ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து கட்சியை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். அந்த வகையில் தற்போது உள்ள மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார். இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என நியமனம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கு அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் ஒத்துக்கொள்ளவில்லை. அதிகார பரவலாக்கத்திற்கு ஒத்துக்கொள்ளாத மாவட்ட செயலாளர்கள் கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பல தொகுதிகளில் டெபாசிட் இழந்தது மட்டுமில்லாமல் 39 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.இதனையடுத்து மீண்டும் பிரிந்து சென்றவர்களை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது.  இது தொடர்பாக ஆலோசிக்கவும், தற்போதுள்ள மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக  ஆலோசிக்க வருகிற 9ஆம் தேதி மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ஆடி வெள்ளி தினம் என்பதால் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ரத்து செய்த எடப்பாடி பழனிச்சாமி, செயற்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவசர செயற்குழு கூட்டம் வருகின்ற 16.8.2024 வெள்ளிக் கிழமை காலை 9.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெறும்.

அதிமுக செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநில அதிமுக செயலாளர்கள், அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும். தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்குழு கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow