கார்த்தி சிதம்பரம்- இளங்கோவன் மோதல் உச்சம்.. தலையில் கைவைத்த செல்வபெருந்தகை.. என்ன நடக்கிறது?

Tamil Nadu Congress : கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து சண்டை போடு வருவதால் தமிழ்நாடு காங்கிரஸ் செல்வபெருந்தகை தலையில் கைவைத்து குழம்பி போய் உள்ளாராம். தொடர்ந்து நீண்டு வரும் உட்கட்சி பிரச்சனையை காங்கிரஸ் சரி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Jul 27, 2024 - 17:16
Jul 27, 2024 - 22:04
 0
கார்த்தி சிதம்பரம்- இளங்கோவன் மோதல் உச்சம்.. தலையில் கைவைத்த செல்வபெருந்தகை.. என்ன நடக்கிறது?
EVKS EIlangovan And Karti Chidambaram Clash In Tamilnadu Congress

Tamil Nadu Congress : இந்தியாவின் நீண்ட நெடிய பாரம்பரிய கொண்ட காங்கிரஸ் கட்சியையும் உட்கட்சி பூசலையும் பிரிக்க முடியாது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இடையே மோதல் நடப்பது தொடர்கதை போன்று நீண்டு வருகிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி  நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியில் உள்ள நிர்வாகிகள் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கார்த்தி சிதம்பரம்- ஈவிகேஎஸ் இளங்கோவன் இடையிலான மோதல் தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.

தமிழ்நாட்டில் நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் போட்டியிட்ட 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால் 'இது காங்கிரசுக்கு முழுமையான வெற்றி அல்ல; திமுகவின் வாக்குகள்தான் காங்கிரசுக்கு கிடைத்துள்ளது. காங்கிரஸ் தனியாக நின்றால் வெற்றி பெற முடியாது' என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதனைத் தொடர்ந்து அண்மையில் திருவள்ளூரில் நடந்த காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, ''2029ம் ஆண்டுமக்களவை தேர்தலில் காங்கிரஸ் தனியாக நின்று வெற்றி பெற வேண்டும். அதற்காக கட்சியினர் இப்போது இருந்தே கடுமையாக உழைக்க வேண்டும். காங்கிரஸ் தனியாக நின்று வலிமை பெற்றால்தான் நமக்கு பலம் கிடைக்கும்'' என்று கூறி இருந்தார்.

ஆனால் செல்வபெருந்தகைக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பேசியிருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ''நாம் தமிழ்நாட்டின் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் திமுகவும், முதல்வர் ஸ்டாலினும்தான். நாம் தனித்து போட்டியிட்டபோது பல தொகுதிகளில் டெபாசிட் இழந்தோம்'' என்று பேசியிருந்தார். 

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, அவருக்கு சுடச்சுட பதிலடி கொடுத்தார் கார்த்தி சிதம்பரம். அதாவது புதுகேகோட்டையில், ''காங்கிரசின் வெற்றிக்கு காரணம் திமுககவும், கூட்டணி கட்சிகளும்தான் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் கூட்டணியாக போட்டியிட்டதால் நமது வாக்கு சதவீதம் குறைந்து விட்டது'' என்றார். மேலும் திமுக அரசின் அமைச்சரவையில் நமக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதுபோல்  கார்த்தி சிதம்பரம் கூறினார்.

இந்த பேச்சுக்கு எதிர் கருத்து தெரிவித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ''திமுக இல்லாவிட்டால் சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் வெற்றி என்ன, டெபாசிட் கூட பெற்றிருக்க முடியாது. இப்போது எம்.பி. ஆகி விட்டால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? உள்ளாட்சி தேர்தல் வர உள்ள நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் இந்த பேச்சு தேவையற்றது. கார்த்தி சிதம்பரமும், ஈவிகேஎஸ் இளங்கோவனும் கூட்டணிக்குள் தேவையில்லாத பிரச்சனையை ஏற்படுத்துகின்றனர்'' என்று கொளுத்தி போட்டார்.

இப்போது மீண்டும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் கார்த்தி சிதம்பரம். புதுக்கோட்டையில் தான் பேசிய வீடியோவை 'எக்ஸ்' தள பக்கத்தில் இணைத்த அவர், ''திமுக அரசின் திட்டங்களும், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளும்தான் காங்கிரஸ் வெற்றிக்கு பெரும் பங்காற்றியது என்பதை நான் மறுக்கவில்லை.

அதே வேளையில் கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்சனையையும் பேசினால்தான் மக்களிடம் நாம் முக்கியத்துவம் பெற முடியும். சமூக பிரச்சனையை பேசாமல் இருந்தால் மக்கள் நம்மை மறந்து விடுவார்கள். தமிழ்நாட்டில் காங்கிரஸ் பிரதான கட்சிகளை விட பின்தங்கி இருப்பதற்கு காரணம் நாம் மக்கள் பிரச்சனையை  பேசாமல் இருப்பதுதான். 

மேலும் படிக்க: காங்கிரஸ் கட்சியை கிள்ளுக்கீரையாக நினைக்கிறதா திமுக?

தமிழ்நாட்டில் காங்கிரஸ் வலுப்பெற வேண்டுமானால் இளைஞர்களை கட்சியில் அதிக அளவில் சேர்க்க வேண்டும். காங்கிரஸ் தலைமை இதை செய்யாவிட்டால் தமிழ்நாடு காங்கிரஸ் எதார்த்த அரசியல் களத்தில் இருக்காது. நான் பேசிய வீடியோவை முழுமையாக பாருங்கள் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்'' என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இந்த பேச்சு  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்-கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்கள் இடையே மேலும் உரசலை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து சண்டை போடு வருவதால் தமிழ்நாடு காங்கிரஸ் செல்வபெருந்தகை தலையில் கைவைத்து குழம்பி போய் உள்ளாராம். தொடர்ந்து நீண்டு வரும் உட்கட்சி பிரச்சனையை காங்கிரஸ் சரி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow