அடுத்த தேர்தலுக்கு வருவார்கள்.. காங்கிரஸ் கட்சியை கிள்ளுக்கீரையாக நினைக்கிறதா திமுக?

I Periyasamy Speech About Congress : தேர்தல் முடிந்து விட்டது; அடுத்த தேர்தலில் அனைவரும் வந்து சேர்ந்து விடுவார்கள் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளது, காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Jul 26, 2024 - 16:54
Jul 27, 2024 - 09:51
 0
அடுத்த தேர்தலுக்கு வருவார்கள்.. காங்கிரஸ் கட்சியை கிள்ளுக்கீரையாக நினைக்கிறதா திமுக?
DMK I Periyasamy Speech About Congress

I Periyasamy Speech About Congress : நடைபெற்று முடிந்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி, தமிழகத்தில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளையும் கைப்பற்றியது. நாடு முழுவதிலும் நடைபெற்ற இந்த தேர்தலில், காங்கிரஸ் தலைமையை கொண்ட ‘இந்தியா’ [INDIA] கூட்டணி தேர்தலை எதிர்கொண்டது.

ஆனாலும், தமிழகத்தில் அமைந்த கூட்டணிக்கு திமுகவே தலைமை தாங்கியது. இந்த கூட்டணியில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன.

தேர்தல் முடிவுகளுக்குப் பின், காங்கிரஸ் கட்சி தனது அமைப்பை வலுவாக்க வேண்டும் என்ற கோரிக்கை, கட்சியினர் மத்தியில் எழுந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் பேசியிருந்த அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, "நாம் பிறரை சார்ந்து இருக்கப் போகிறோமா.. அல்லது சுயமாக இருக்கப் போகிறோமா.. எத்தனை காலம் பிறரை சார்ந்திருக்கப் போகிறோம்..

காங்கிரஸ் பெரியக்கத்துக்கு என்று வரலாறு இருக்கிறது. நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 99 பேர் வெற்றிபெற்று இருக்கிறார்கள். இரண்டு பேர் தாமாக முன்வந்து காங்கிரஸ் பக்கம் இணைந்துள்ளார்கள். ஆகவே நம்முடைய கணக்கு 101. இது இன்னும் ஏறப்போகிறது. தோழமை என்பது வேறு. தோழமையுடன் இருப்பதில் நமக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை. ஆனால் எவ்வளவு காலம் சார்ந்து இருக்கப் போகிறோம் என்கிற கேள்வி எழுகிறது” என்று பேசியிருந்தார்.

ஆனால், அந்த கூட்டத்திலேயே பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், "இன்று 40 இடங்களில் வெற்றிபெற்று இருக்கிறோம். அதற்கு திமுகவும், ஸ்டாலினும்தான் காரணம். நாம் தனித்து நின்றபோது சிவகங்கை, கன்னியாகுமரியில் மட்டும் ஒரு லட்சம் வாக்குகளை பெற்று தோற்றோம். பிற இடங்களில் டெபாசிட்கூட பெற முடியவில்லை. தேர்தலில் நின்ற அனைவரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் அதற்கு திமுகவும், ஸ்டாலினும்தான் காரணம். ஆசை இருக்கலாம். ஆனால் அது பேராசையாக மாறி கடைசியில் ஒன்றும் இல்லாமல் போய்விடக் கூடாது" என்று தெரிவித்து இருந்தார்.

அப்போதே இது பேசுபொருளாகி இருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், “மக்களவைத் தேர்தலில் கூட்டணியால் வெற்றி பெற்றோம் என்பதற்காக நமக்கு பலம் இல்லை என்று நினைக்க வேண்டாம். காங்கிரஸ் சேரும் கூட்டணிக்கு தான் சிறுபான்மையினர், ஆதிதிராவிடர்கள் வாக்கு அளிக்கின்றனர். 40 தொகுதிகளிலும் வெல்வதற்கு நாமும் உறுதுணையாக இருந்துள்ளோம்.

கூட்டணியில் இருக்கிறோம் என்று மக்கள் பிரச்சினையை பேசாததால் மக்கள் நம்புவதில்லை. உள்ளூர் பிரச்சினையை பேசாமல் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாது. பொது மேடையில் மாநிலத் தலைமை மக்கள் பிரச்சினை குறித்து பேச வேண்டும். ரூ.20,000 கோடிக்கு கள்ளச்சாராயம் விற்பனையாகிறது. அது அதிகார வர்க்கத்துக்கு தெரிந்து தான் நடக்கிறது.

கூட்டணி தர்மம் என்று கூறி கூனி, குறுகி இருக்கக் கூடாது. தேர்தல் இல்லாத நேரத்திலும் நாம் ஆக்கபூர்வமான அரசியல் கட்சியாக செயல்பட வேண்டும். வருகிற 2029-ல் இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். ஆனால் அதற்கு முன் 2026-ம் ஆண்டு தமிழகத்தில் காங்கிரஸுக்கு முக்கியமான தேர்தல். அப்போது அமையும் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இருவரின் கருத்தும், திமுக தலைமைக்கு கசப்பை ஏற்படுத்துவதாக அமைந்தது. ஆனாலும், கூட்டணி கட்சி என்ற முறையில் திமுக மூத்த தலைவர்கள் எந்த கருத்தையும் வெளியிடாமலேயே இருந்து வந்தனர்.

இந்நிலையில், திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “தேர்தல் முடிந்து விட்டது. அடுத்த தேர்தலில் அனைவரும் வந்து சேர்ந்து விடுவார்கள். கருத்து வேறுபாடுகள் வரலாம். இந்திய கூட்டணியை உருவாக்கி 40க்கு 40 வெற்றி பெற்று இமாலய சாதனை படைத்துள்ளோம்.

கருத்து உரிமைகளில் நாம் தலையிடுவதில்லை. திமுக கருத்து வாதங்களை எடுத்து வைத்தும், வாதங்களுக்கு வாதம் எதுவாக இருந்தாலும், அரசியலுக்கு அரசியல் என எல்லாவற்றையும் சந்தித்து வந்த இயக்கம் திமுக” என்று தெரிவித்துள்ளார்.

இதனால், திமுக - காங்கிரஸ் கட்சியினர் இடையேயான கூட்டணியில் சிக்கல் எழுந்துள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். “அடுத்த தேர்தலில் அனைவரும் வந்து சேர்ந்து விடுவார்கள்” என்று அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, தேர்தல் நேரத்தில் கண்டிப்பாக அண்ணா அறிவாலயத்தின் வாசலில் நிற்க வேண்டி வரும் என்பதை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது. 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கிற்கு பிறகு, இரண்டு கட்சிகளிடையே இணக்கமான உறவு இல்லை. அப்போது, கூடா நட்பு கேடாய் முடியும் என்றெல்லாம், திமுக தலைவர் கருணாநிதி பேசியிருந்தார். தேர்தலுக்கு முன்னமே, காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக பேச்சுகள் அடிபட்டன. இந்நிலையில், இத்தகைய பேச்சுகள் தமிழக அரசியல் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன. காங்கிரஸ் கட்சியை திமுக கிள்ளுக்கீரையாக நினைக்கிறதா என்று காங்கிரஸ் கட்சியினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow