சில்லு சில்லாக சிதறிய அதிமுக ஒருங்கிணையுமா?.. மாவட்ட செயலாளர்களுக்கு இபிஎஸ் அழைப்பு

ஆகஸ்ட் 9 ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

Aug 6, 2024 - 20:29
 0
சில்லு சில்லாக சிதறிய அதிமுக ஒருங்கிணையுமா?.. மாவட்ட செயலாளர்களுக்கு இபிஎஸ் அழைப்பு
Edappadi Palaniswamy


ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தொடர்  தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை கைப்பற்ற ஆயத்தமாகி வருகிறது. சில்லு சில்லாக சிதறி போயுள்ள அதிமுக ஒருங்கிணைந்தால் மட்டுமே வெற்றி வசப்படும் என்று பலரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆலோசனை கூறி வருகின்றனர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. 

மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி உள்ளார். அதில் தோல்விக்கான காரணங்கள் ஆராயப்பட்டதோடு, சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் பணிகளை துவக்கும்படி அறிவுறுத்தி இருந்தார். இந்த நிலையில் வரும் 9 ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ளது.

மக்களவைத்  தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் பயணிக்கத் தொடங்கிவிட்டன. வெற்றி பெற்ற கட்சிகளை விட தோல்வியடைந்த கட்சிகள்தான் அதற்கான காரணத்தை ஆலோசித்து வருகிறது. 

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் நீடிக்குமா என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. இப்போதே பஞ்சாயத்தை ஆரம்பித்து விட்டது காங்கிரஸ் கட்சி. அதிக இடங்களை கேட்டு பெற்று வென்று கூட்டணி ஆட்சியில் இடம் பெற வேண்டும் என்பது தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்களின் எண்ணமாக உள்ளது. 

அதே நேரத்தில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி உருவாக வாய்ப்புள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. பாஜக உடன் கூட்டணி இல்லை என்று பலமுறை வெளிப்படையாகவே அறிவித்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து தினசரியும் மாவட்ட ரீதியாக நிர்வாகிகளை அழைத்து ஆலோசித்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் குறித்த ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த வாரம் கூட்டம் நடைபெற்றது.  

கூட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்தும், குறிப்பாக தென் சென்னையில் டெபாசிட் இழக்கும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டது ஏன் என எடப்பாடி பழனிச்சாமி கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தோல்விக்கான காரணங்கள் குறித்து பேசிய நிர்வாகிகள், கூட்டணி வலுவாக அமையாதது முக்கிய காரணமாக தெரிவித்துள்ளனர். மேலும் கட்சியில் நிலவும் உட்கட்சி பிரச்சனைகளும் முக்கிய காரணம் என சிலர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே கிதறிப்போய் இருக்கும் அதிமுகவை ஒருங்கிணைத்தால் மட்டுமே 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றும் பலரும் ஆலோசனை கூறியுள்ளனர். இந்த நிலையில்தான் உச்சாணி கொம்பில் அமர்ந்திருந்த எடப்பாடி பழனிச்சாமி சற்றே இறங்கி வந்துள்ளார். அதிமுகவில் சசிகலா, ஓ.பன்னீர் செல்வத்திற்கு இடமில்லை என்று திட்டவட்டமாக கூறினாலும் மாவட்ட செயலாளர்களை ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow