Wayanad Landslide : வயநாடு நிலச்சரிவு.. பலர் உயிரிழப்பு..மண்ணோடு மண்ணாக புதைந்த 1000 பேரின் நிலை என்ன?

Wayanad Landslide Today in Kerala : கேரள மாநிலம் வயநாடு முண்டகை சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஆயிரம் பேர் வரை சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கனமழையால் பல இடங்களில் சாலைகள், பாலங்கள் இடிந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Jul 30, 2024 - 07:17
Aug 1, 2024 - 11:49
 0
Wayanad Landslide : வயநாடு நிலச்சரிவு.. பலர் உயிரிழப்பு..மண்ணோடு மண்ணாக புதைந்த 1000 பேரின் நிலை என்ன?
Wayanad Landslide Today in Kerala

Wayanad Landslide Today in Kerala : கேரளாவின் வயநாடு பகுதியில் தென்மேற்கு பருவமழை  தீவிரமடைந்துள்ளதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வயநாடு சூரல்மலை பகுதியில் கேரளா மின்சார வாரியம் கட்டிய அணையும் நிரம்பி வழிவதால் உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.இடைவிடாது கொட்டிய கனமழையால் நேற்று காலை முதலே சூரல்மலை பகுதியில் லேசான நிலச்சரிவுகள் சில இடங்களில் ஏற்பட்டன. பெரும் எண்ணிக்கையிலான கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்திருந்தது. ஏராளமான வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தன.

இந்த நிலையில் இரவு முழுவதும் விடிய விடிய கொட்டிய மழையால் சூரல்மலைப் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 60 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் நிலச்சரிவில் சிக்கிய 500 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

4.10 மணியளவில் மணியளவில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதாகத் கூறப்படுகிறது. வைத்திரி தாலுக்கா, வெள்ளேரிமலை கிராமம், மேப்பாடி பஞ்சாயத்தில் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  தொடர்ந்து அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. சூரல்மலையிலிருந்து முண்டகை வரையிலான சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. 

முண்டகை பகுதியை சென்றடைவதற்கான ஒரே ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் நிலச்சரிவில் சிக்கியவர்களையும் படுகாயமடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. கேரளாவில் கனமழை காரணமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்ட அத்தனை பேரிடர் மீட்பு குழுக்களும் ஒட்டுமொத்தமாக சூரல்மலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கேரளாவில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. தற்போதைய தகவல்களின் அடிப்படையில் வயநாடு சூரல்மலை நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். 500 வீடுகளில் இருந்த 1,000 பேர் மண்ணோடு மண்ணாக புதைந்துள்ளதால் அவர்களின் கதி என்னவானதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. 

இதுகுறித்து பேசிய அதிகாரிகள், "சாலையில் விழுந்த மரங்கள் மற்றும் மண் காரணமாக சம்பவ இடத்திற்கு செல்வதில் சிரமம் உள்ளது. மின்சாரம் இல்லாததால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சாலைகளில் உள்ள  மண்ணை அகற்றும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்திற்கு கூடுதல் என்டிஆர்எஃப் குழு அனுப்பப்பட்டுள்ளது. கண்ணூர் பாதுகாப்புப் படையின் இரண்டு குழுக்கள் வயநாடு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்பு குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வருகின்றனர்.

பல இடங்களில் சாலைகள், பாலங்கள் இடிந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மீட்புப் பணியில் விமானப் படை ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow