மதிக்காத மருத்துவர்கள்... பதவி விலகத் தயார்.... குண்டைத் தூக்கிப் போட்ட மம்தா பானர்ஜி!

சாமானியர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக பதவி விலகவும் தயாராக இருக்கிறேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Sep 12, 2024 - 21:29
 0
மதிக்காத மருத்துவர்கள்... பதவி விலகத் தயார்.... குண்டைத் தூக்கிப் போட்ட மம்தா பானர்ஜி!
பதவி விலகத் தயார்.... குண்டைத் தூக்கிப் போட்ட மம்தா பானர்ஜி

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  நாள்தோறும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகளுக்கும், சுமார் 1,500 உள்நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கும் இடம். பெரும்பாலான இடங்களில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். காவலர்கள் மற்றும் சி.சி.டி.வி. கேமராக்களுக்கும் குறைவில்லை. அப்படிப்பட்ட ஓரிடத்தில் பாதி உடலில் ஆடைகளின்றி ஒரு பெண் இறந்துகிடந்தார். அவர் ஒரு முதுநிலை மருத்துவ மாணவி.  

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் உடற்கூறாய்வு அறிக்கையும் அதை உறுதிப்படுத்தியது. உதடு, வலது கை, கழுத்து, வயிறு மற்றும் பிறப்புறுப்பில் காயங்கள் இருந்ததும் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டிருந்ததும் உடற்கூறாய்வில் தெரியவந்தது. இந்தத் தகவல் கொல்கத்தா மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சி.சி.டி.வி. காட்சிகளின் உதவியுடன் விசாரணையை தீவிரப்படுத்தியது காவல்துறை.

இந்நிலையில் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டும், கொலைக்கு தொடர்புடையவர்களுக்கு சட்டப்படி தண்டனைப் பெற்றுக்கொடுக்கவும், இந்த கொலையை மூடி மறைக்க முயன்ற அதிகாரிகள், காவல்துறையினரை பதவி விலக கோரியும் ஆர்.ஜி. கர் மருத்துவனை மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது.இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்த மேற்கு வங்க அரசு மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் தொடர்ந்து 3 நாட்கள் அழைப்பு விடுத்தும் மருத்துவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. 

இதுகுறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “மருத்துவர்களை சந்திக்க தலைமை செயலகத்தில் (நபன்னா) 2 மணி நேரம் காத்திருந்தோம். ஆனால், யாரும் வரவே இல்லை. 3 நாட்களும் வரவில்லை. பெரும்பாலான மருத்துவர்கள் பேச்சுவார்த்தையில் ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால் ஒரு சிலரே இதற்கு முட்டுக்கட்டைப் போட விரும்பினர் என்பது எங்களுக்குத் தெரியவந்துள்ளது" என மறைமுகமாக எதிர்க்கட்சிகளை தாக்கி பேசி உள்ளார்.   

மேலும் படிக்க: “தனது மகன்களை தவறாக சித்தரிக்கின்றனர்..” பாடகர் மனோவின் மனைவி கண்ணீர்!

தொடர்ந்து பேசிய அவர், “சாமானியர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக பதவி விலகவும் தயாராக இருக்கிறேன். ஆனால் அவர்கள் நீதியை விரும்பவில்லை. அவர்களுக்கு நாற்காலி தான் வேண்டும். மருத்துவர்கள் கேட்டுக்கொண்டபடியே பேச்சுவார்த்தையை நேரடியாக ஒளிபரப்ப தாங்கள் தயாராக இருக்கிறோம்.  ஆனால் சில சட்டசிக்கல்கள் அதில் இருப்பதால்தான் மறுக்கிறோம். வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியமான ஆவணப்படுத்தலுக்காக பேச்சுவார்த்தையை பதிவு செய்வதற்கான முழு அமைப்பும் எங்களிடம் இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் அந்த பதிவைப் பகிரவும் நாங்கள் தயாராக இருந்தோம். ஒரு வழக்கு விசாரணையில் இருப்பதால், இந்த வழக்கின் நுணுக்கங்களை நாம் விவாதிக்க முடியாது. அதனால்தான், பேச்சுவார்த்தையை பதிவு செய்ய மட்டும் ஏற்பாடு செய்தோம்” என தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow