ஆம்ஸ்ட்ராங் படுகொலை... திமுக-காங்கிரசுக்கு ஜே.பி.நட்டா கண்டனம்... பரபரப்பு ட்வீட்!

''ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்துக்கும், அவரது கட்சி தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்''

Jul 6, 2024 - 19:22
 0
ஆம்ஸ்ட்ராங் படுகொலை... திமுக-காங்கிரசுக்கு ஜே.பி.நட்டா கண்டனம்... பரபரப்பு ட்வீட்!
ஜே.பி.நட்டா-ஆம்ஸ்ட்ராங்

டெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு மத்திய அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு தனது வீட்டின் முன்பு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பெரம்பூரில் செம்பியம் காவல் நிலையம் அருகில் நடந்த இந்த படுகொலை தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளதால் பெரம்பூர் உள்ளிட்ட பல இடங்களில் பதற்றம் நிலவி வருகிறது.

சென்னை ராஜூவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மருத்துவமனைக்கு வெளியே திரண்டிருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தொண்டர்கள் தமிழ்நாடு அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

''ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படுவார் என உளவுத்துறை முன்பே எச்சரிக்கை விடுத்தும் காவல்துறை மெத்தனமாக இருந்துள்ளது. இந்த வழக்கு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என்று  பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். பின்பு அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இதற்கிடையே தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீரழிந்து விட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். 

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ''ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் தலித் தலைவர்கள் மீதான தாக்குதலுக்கு அரசு முடிவுகட்ட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

இது தவிர மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், சிவராஜ் சிங் செளகான் ஆகியோர் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், மத்திய அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது வேதனை அளிக்கிறது.

ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்துக்கும், அவரது கட்சி தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன். திமுககவும்-காங்கிரசும் அற்ப அரசியலை கைவிட்டு ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow