பவுடர் பூசுவதால் புற்றுநோய் உண்டாகும் - உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவல்
பவுடர் உபயோகிப்பதால் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நமது நாட்டில் குழந்தைகள் முதல் நடுத்தர வயதுடையவர்கள், முதியவர்கள் வரை அனைவருமே அன்றாடம் உபயோகிக்கும் ஒரு பொருளாக முகப்பூச்சு பவுடர்கள் இருந்து வருகிறது. பச்சிளம் குழந்தைகளை குளிக்க வைத்தவுடன், நாம் சாதாரண பவுடர்கள் முதல் விலையுயர்ந்த பவுடர்கள் வரை உபயோகித்து வருகிறோம். இது குழந்தையை சுத்தமாகவும், துர்நாற்றமில்லாமல் வைத்திருக்கவும், வியர்க்குரு, சொறி உள்ளிட்டவைகள் ஏற்படாமல் இருக்கவும் உதவுவதாக நம்பப்படுகிறது.
அதே போல இளைஞர்களும், பெண்களும் தங்களது அழகினை மெறுகேற்றுவதற்காகவும், நறுமணத்திற்காகவும் முகப்பூச்சுக்களை பயன்படுத்தி வருகின்றனர். முதியவர்கள் கூட அன்றாடம் உபயோகிக்கும் பொருளாக முகப்பூச்சுகள் உள்ளன.
இதற்கிடையில் கடந்த 2020ஆம் ஆண்டு, குழந்தைகளுக்கான பிரத்யேக தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்புகள் புற்றுநோயை உண்டாக்குவதாக ஆயிரக்கணக்கானோர் வழக்குகள் தொடுத்தனர். அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை என்று அமெரிக்காவில் மட்டும் சுமார் 16 ஆயிரம் வாடிக்கையாளர்கள் வழக்கு தொடுத்தனர்.
இதனையடுத்து, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் குழந்தைகளுக்கான டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்துவதாக அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. மேலும், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் பலநூறு கோடி டாலர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (IARC) சமீபத்தில் நடத்திய ஆய்வில் டால்கம் பவுடர், மனிதர்களுக்கு கருப்பை புற்றுநோயை ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.
முகப்பூச்சு பவுடர்கள் பெண்களுக்கு கருப்பை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும், என்பதற்கான "போதுமான சான்றுகள்" உள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், மனித உயிரணுக்களில் புற்றுநோய்க்கான அறிகுறிகளைக் காட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
டால்க் என்பது இயற்கையாகக் கிடைக்கும் ஒரு கனிமமாகும், இது உலகின் பல பகுதிகளில் வெட்டப்பட்டு, டால்கம் பேபி பவுடர் தயாரிக்கப் பயன்படுகிறது. பெரும்பாலான மக்கள் பேபி பவுடர் அல்லது அழகுசாதனப் பொருட்கள் வடிவில் டால்கிற்கு ஆளாகிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் டால்க் வெட்டப்படும்போது, பதப்படுத்தப்படும்போது அல்லது தயாரிப்புகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்போது மிக முக்கியமான வெளிப்பாடு ஏற்படுவதாகவும், பிறப்புறுப்புகளில் பயன்படுத்தும் பெண்களில் கருப்பை புற்றுநோயின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதை பல ஆய்வுகள் காட்டுவதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் குறிக்கோள் "இந்தப் பொருளுக்கு சில நிபந்தனைகளின் கீழ் புற்றுநோயை உண்டாக்கும் ஆற்றல் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளிப்பது மட்டுமே ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
What's Your Reaction?