ஈழத்தில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற போர் கடந்த 2009ல் முடிவுக்கு வந்தாலும், அதன் ரணம் தொப்புள்கொடி உறவுகளை மீளா துயரில் ஆழ்த்தி வருகிறது. இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்ஷே, கோத்தபய ராஜபக்ஷே, ரனில் விக்கிரமசிங்கே, மைத்ரி சிறிசேனா, சரத் ஃபொன்சேகா உள்ளிட்டோரை போர்க்குற்றவாளிகள் என அறிவிக்கவேண்டும் என்பதுதான் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளின் கோரிக்கையாக் இருந்து வருகிறது. இந்த நிலையில், அவர்களுக்கு முதல் வெற்றியை கொடுத்து இங்கிலாந்து அதிரடி காட்டியுள்ளது.
இதுகுறித்து லண்டனில் உள்ள சர்வதேச பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசினோம். சிங்கள ராணுவத்தின் 58வது பிரிவு மாஜி தளபதி சவேந்திர சில்வா. இவர்தான் முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட போரை முடிவுக்குக் கொண்டுவந்து, பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டிருந்த மருத்துவமனைகள், செஞ்சிலுவைச் சங்கங்கள் மீது குண்டுமழை பொழிந்து தினமும் கொத்துக் கொத்தாக தமிழர்களை கொன்றவரும் இவரேதான்.
ஒரே நாளில் 7000 பேரைக் கொன்று குவித்தது, பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனின் நெஞ்சில் ஐந்து குண்டுகளைப் பாய்ச்சி கொலை செய்ப உத்தரவிட்டது இந்த சவேந்திர சில்வாதான். அடுத்து, இறுதி யுத்தத்தின்போது இங்கிலாந்து அரசு உதவியுடன் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், அமைதி பேச்சாளர் பூலித்தேவன் உள்ளிட்ட 60 பேரை இரக்கமின்றி கொடூரமாக கொலை செய்தவர் மாஜி தளபதி ஜெகத் ஜெயசூரியா.
கடற்படைத் தளபதி வசந்த கரன்னகோடா, கொழும்பில் படித்துக்கொண்டிருந்த 11 தமிழ் மாணவர்களைப் பிடித்துக்கொண்டு போய் சித்திரவதை செய்து கொன்றவர். அடுத்து புலிகளிடமிருந்து பிரிந்து சிங்கள ராணுவத்துடன் இணைந்த கருணா, தமிழ் இளைஞர்களை கொடூரமாக கொன்றார். இத்தகைய அனைத்து குற்றங்களுக்காக இவர்கள் நான்கு பேரையும் போர்க்குற்றவாளிகளாக அறிவித்து நாட்டிற்குள் நுழைய தடை விதித்திருக்கிறது இங்கிலாந்து அரசு.
இதுகுறித்து ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசியிடம் பேசினோம். போர்க்குற்றவாளிகளான சிங்கள ராணுவத் தளபதிகளுக்கு தடை விடுக்கப்பட்டிருப்பது சரிதான் என்று கூறிய துளசி, யுத்த காலத்தில் ஒட்டுமொத்த ராணுவத்திற்கும் தளபதியாயிருந்த சரத் ஃபொன்சேகா மீது ஏன் எந்தவித நடவடிக்கையும் இல்லை? தமிழர்களை படுகொலை செய்ய உத்தரவிட்ட மாஜி அதிபர்கள் மகிந்த ராஜபக்ஷே, கோத்தபய ராஜபக்க்ஷே ஆகியோருக்கு ஏன் தடை விதிக்கப்படவில்லை? இது ஒரு ஜியோ பொலிட்டிகல் கேம் என்று கூறுகின்றார்.
இலங்கை அதிபர் அநுர திசநாயகவிற்கு பெரும் இடர்ப்பாட்டை ஏற்படுத்தும் செயலை சர்வதேசம் செய்திருப்பது புலனாகிறது என்று கூறும் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளரான துளசி, சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக சிங்கள இளைஞர்கள் ரோகிணி விஜயவீரா தலைமையில் ஜேவிபியை தொடங்கியபோது சுமார் 60 ஆயிரம் சிங்கள இளைஞர்களைக் கொன்று குவித்ததும் சவேந்திர சில்வாதான் என்றார்.
சிங்கள ராணுவத் தளபதிகளுக்கு தடை விதிக்கக் காரணமாயிருந்த பிரிட்டானியா தமிழர் பேரவையின் தலைவர் ரவியிடம் பேசினோம். நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்ரவதைகள் பாலியல் வன்முறைகள் போன்ற கடும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதற்காக நான்கு பேருக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறிய அவர், அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர், டேவிட் லோமி எம்பி ஆகியோர், 'புலம்பெயர் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவோம்' என்று உறுதி அளித்திருந்ததை சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் தெரிவித்தாஅர். தொடர்ந்து பேசிய ரவி, போர்க்குற்றவாளிகளுக்கு உலகளாவிய மனித உரிமை மீறல் விதிப்படி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று கன்சர்வேடிவ் கட்சி எம்.பி. தெரசா வில்லியர்ஸ் மற்றும் எம்.பிக்கள் ஸ்டீபன் டிம்ஸ், வெஸ் ஸ்டிரீட்டிங் ஆகியோர் ஐநாவில் குரல் கொடுத்து வருவதையும் வரவேற்பதாக தெரிவித்தார்.
வரும் காலங்களில் பிற ஐரோப்பிய நாடுகளும் இதேபோன்று தடை விதிக்க வேண்டும் என்று கோரி, அந்தந்த நாட்டு தமிழ் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட இருப்பதாகவும், தளபதிகள் மட்டுமல்ல சிங்கள தலைவர்களும்கூட சிக்குவார்கள், இங்கிலாந்தின் இந்தத் தடையால் இலங்கை ராணுவத் தளபதிகளும் அரசியல்வாதிகளும் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள், ஏனென்றால் அவர்களின் முக்கிய சுற்றுலா இடம் இங்கிலாந்து, அவர்களின் பிள்ளைகள் படிக்க விரும்பும் இடமும் லண்டன் தான் என்று பிரிட்டானியா தமிழர் பேரவையின் தலைவர் ரவி தெரிவித்தார்.
நால்வருக்கான தடை விதிப்பு குறித்து இலங்கை அதிபர் அநுர திசநாயக இதுவரை வாய்திறக்காத நிலையில், இதைப் பயன்படுத்தி சிங்கள இனவாதத்தை மீண்டும் தூண்டிவிட ஆரம்பித்திருக்கிறார்கள் சிங்கள அரசியல்வாதிகள் என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது. மாஜி அதிபர் மகிந்த ராஜபக்க்ஷே.தேசப் பாதுகாப்பை உறுதி செய்யவே சண்டை போட்டதாகவும், வெளிநாட்டு அழுத்தங்களுக்கு இந்த அரசு பணியக் கூடாது, புலிகள் இயக்கத்திலிருந்து வெளியே வந்த கருணாவுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது, இங்கிலாந்தில் வாழும் புலிகள் ஆதரவு தமிழர்களை திருப்திப்படுத்தவே இந்த தடை நடவடிக்கை என்று பிரிட்டானியா தமிழர் பேரவையின் தலைவர் ரவி கூறினார்.
மகிந்த ராஜபக்ஷே மட்டுமல்ல, அவரின் மகன் நமல் ராஜபக்ஷே, மாஜி அதிபர் மைத்ரி சிறிசேனா மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக சேர்ந்து மாஜி தளபதிகள் வார் ஹீரோக்கள். தமிழர்களோடு இணைந்து செயல்படுவதால், அவர்களை விட்டுக்கொடுக்கப் பார்க்கிறார் பிரதமர் அநுர திசநாயக என்று இனவாதத்தை ஊதிப் பெரிதாக்கிவருவது அநுர அரசுக்கு தலைவலியாக மாறியிருப்பதாகக் கூறப்படுகிறது.