ஆம்ஸ்ட்ராங் உடலை வாங்க மறுப்பு... ராஜீவ்காந்தி மருத்துவமனை முன்பு ஆதரவாளர்கள் போராட்டம்... இரவிலும் பரபரப்பு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 10 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. ''ஆனால் உண்மையான குற்றாவளிகளை போலீசார் கைது செய்யவில்லை'' என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை: ஆம்ஸ்ட்ராங் உடலை வாங்க மறுத்து ராஜீவ்காந்தி மருத்துவமனை முன்பு பகுஜன் சமாஜ் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உணவு டெலிவரி செய்வதுபோல் ஆடை அணிந்திருந்த மர்ம கும்பல் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ''தமிழ்நாட்டில் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட தவறி விட்டார்'' என்று அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதால் சென்னை முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த கொலை வழக்கு தொடர்பாக 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 10 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையான குற்றாவளிகளை போலீசார் கைது செய்யவில்லை என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் உடல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மருத்துவமனை வெளியே திரண்ட பகுஜன் சமாஜ் ஆதரவாளர்கள், ''ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும் அவர்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து விட்ட நிலையிலும், அவரது உடலை ஆதரவாளர்கள் வாங்க மறுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இறுதிச்சடங்கு நாளை மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது. அவரது உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய ஆதரவாளர்கள் அனுமதி கேட்டனர். ஆனால் அதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஆம்ஸ்ட்ராங் உடலை வாங்க மறுக்கும் ஆதரவாளர்கள், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முன்பு இரவிலும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏராளமான பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் மருத்துவமனை சாலை முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதி முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களை கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
What's Your Reaction?