ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20... இந்திய அணி அதிர்ச்சி தோல்வி... சொதப்பிய ஐ.பி.எல் ஸ்டார்கள்!

இந்த போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுக வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா (0), ரியான் பராக் (2 ரன்), கலீல் அகமது (3 ஓவர் வீசி 28 ரன் கொடுத்தார்) ஆகியோர் முதல் போட்டியில் சொதப்பி விட்டனர். இந்த இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நாளை நடக்கிறது.

Jul 6, 2024 - 20:52
Jul 8, 2024 - 12:55
 0
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20... இந்திய அணி அதிர்ச்சி தோல்வி... சொதப்பிய ஐ.பி.எல் ஸ்டார்கள்!
இந்தியா-ஜிம்பாப்வே டி20 சீரிஸ்

ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 

இந்திய அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி ஹராரேவில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களே களம் கண்டனர்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 115 ரன்கள் எடுத்தது. கிளைவ் மடாண்டே 29 ரன்கள் எடுத்தார். டியான் மியர்ஸ் 23 ரன் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னோய் 4 ஓவரில் 13 ரன் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

பின்பு எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி ஜிம்பாப்வே வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 22/4 என தடுமாறியது. ஐபிஎல்லில் கலக்கிய அபிஷேக் சர்மா முதல் ஓவரிலிலேயே டக் அவுட் ஆன நிலையில், ருத்ராஜ் கெய்க்வாட் (7 ரன்), ரியான் பராக் (2), ரிங்கு சிங் (0) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மறுபக்கம் சுப்மன் கில் (31 ரன்) தனியாக போராடி அவுட் ஆனார். அவருக்கு ஒத்துழைப்பு தந்த வாஷிங்டன் சுந்தரும் (27 ரன்) அவுட்டான பிறகு இந்திய அணியின் வெற்றிக் கனவு தகர்ந்தது. துருவ் ஜுரல் (6 ரன்), அவேஷ் கான் (16 ரன்) எளிதில் விக்கெட் இழக்க இந்திய அணி 19.5 ஓவரில் 102 ரன்னுக்கு ஆல்அவுட்டாகி 13 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஜிம்பாப்வே தரப்பில் தென்டை சத்தரா3 விக்கெட்டுகளும், சிக்கந்தர் ராசா 3 விக்கெட்களும் வீழ்த்தினார்கள். ஆல்ரவுண்டராக ஜொலித்த சிக்கந்தர் ராசா ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த ஆண்டில் இந்திய அணி தோல்வியை சந்தித்த முதல் டி20 போட்டி இதுவாகும். 

இந்த போட்டிக்கு பிறகு பேசிய கேப்டன் சுப்மன் கில், ''பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் பீல்டிங் கில் கோட்டை விட்டோம். வரிசையாக விக்கெட் வீழ்ந்ததால் இலக்கை நெருங்க முடியவில்லை'' என்றார்.

இந்த போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுக வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா (0), ரியான் பராக் (2 ரன்), கலீல் அகமது (3 ஓவர் வீசி 28 ரன் கொடுத்தார்) ஆகியோர் முதல் போட்டியில் சொதப்பி விட்டனர். இந்த இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நாளை நடக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow