டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலம் ரத்து.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்..!

மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்தது மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனைதொடர்ந்து அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

Jan 23, 2025 - 17:45
 0
டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலம் ரத்து.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்..!
டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலம் ரத்து

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மத்திய அரசு ரத்து செய்து உத்தரவு வெளியிட்டுள்ளது. 

மதுரை மாவட்டம் மேலூரில், டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்காக வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு ஜூலை 24 ஆம் தேதி, மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் ஏல அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில், கடந்த நவம்பர் 7ஆம் தேதி வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் (Hindustan Zinc) நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.  இதுதொடர்பாக, மத்திய சுரங்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுரங்கம், கனிம மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 1957-ன் படி ஏலம் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் மதுரை நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் கனிமம் எடுக்கப்பட உள்ளதாகவும் மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவித்துள்ளது. 

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட்டிற்கு மத்திய அரசு வழங்கியுள்ளதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில், முதலமைச்சர் ஸ்டாலின் மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். 

இந்தத் திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த விவகாரத்தில் பாஜக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தமிழக சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.,வின் மாநில தலைவர் அண்ணாமலை, கண்டிப்பாக டங்ஸ்டன் சுரங்கம் கொண்டு வர அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியாக தெரிவித்த நிலையில், டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக்குழுவினருடன் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் டில்லி சென்றனர். நேற்று அவர்கள் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசினர்.

இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாயக்கர்பட்டி டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நேற்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்த போராட்டக்குழுவினர், நாயக்கர்பட்டி டங்ஸ்டன் சுரங்கம் அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலம் மற்றும் பல கலாசார பாரம்பரிய தலங்களை உள்ளடக்கி உள்ளதாக கூறியிருந்தனர். இதனைத்தொடர்ந்து, பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதை கருத்தில் கொண்டு மதுரை நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம ஏலத்தை ரத்து செய்யப்படுகிறது என்று மத்திய அரசு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மதுரை டங்ஸ்டன் திட்டத்திற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில்,மதுரை மக்கள் மகிழ்ச்சியுடன் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த ஊடகங்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow