வராகி நில மோசடி வழக்கு.. மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்...!
வராகி குறித்து பேசிய வீடியோ யாரிடம் அனுமதி பெற்று பதிவிட்டீர்கள்...? மற்றும் சமூக ஊடகங்களில் வழக்கு விசாரணை குறித்து பேசலாமா..? என்று காவல்துறையினர் என்னிடம் கேள்வி எழுப்பியது பத்திரிக்கை சுதந்திரத்தை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரபல பத்திரிகையாளர் வராகி, நில மோசடி வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், இது தொடர்பாக ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் அவருடைய யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ தொடர்பாக தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை ஒப்படைக்குமாறு நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறும் சென்னை மத்திய குற்றபிரிவு நில அபகரிப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
சம்மன் அனுப்பபட்டதைத் தொடர்ந்து, இன்று (டிச.16) காலை 11 மணி அளவில் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜரான நிலையில் அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 50க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் வாக்குமூலம் எழுத்து மூலமாகவும் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
எழுத்து மூலமாக பெறப்பட்ட வாக்குமூலத்தில், கையெழுத்திட காவல்துறை வலியுறுத்தியதாகவும் ஆனால், சவுக்கு சங்கர் கையெழுத்து இடவில்லை எனவும் கூறப்படுகிறது.
மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கர், "கைதான வராகியை போலீசார் பழிவாங்குவதாக வீடியோ பதிவிட்டு இருந்தேன், இன்றைய விசாரணை என்பது போலீசார் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்ற மிரட்டும் தொனியில் நடந்தது. சென்னையில் நடந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் 200 வீடியோக்கள் பதிவாகியுள்ளது. அது தொடர்பாக எத்தனை பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது என்ற கேள்விக்கு காவல்துறையிடம் பதில் இல்லை. ஆனால், எனக்கு கொடுக்கப்பட்டிருந்த சம்மன் பத்திரிகை சுதந்திரத் துறைக்கு எதிரான சம்மனாக நான் பார்க்கிறேன் என்று கூறினார்.
வராகி குறித்து நீங்கள் பேசிய வீடியோ யாரிடம் அனுமதி பெற்று பதிவிட்டீர்கள் என்றெல்லாம் என்னிடம் காவல்துறையினர் கேள்வி கேட்டனர். சமூக ஊடகங்களில் வழக்கு விசாரணை குறித்து பேசலாமா..? என்ற கேள்வி எல்லாம் என்னிடம் கேட்கப்பட்டது.
முதலில் வாக்குமூலம் பெற்று யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என காவல்துறையின் இந்த போக்கை நான் வன்மையாக கண்டிக்கிறேன். என்னிடம் நடத்தப்பட்ட விசாரணையை பார்க்கும் போது காவல்துறையினர் வெளிப்படையாகவே தன்னை மிரட்டுவது போன்று தான் தெரிகிறது என்று கூறினார்.
வாக்குமூலத்தில் நான் கையெழுத்திடவில்லை. இந்த வழக்கில் பத்திர பதிவுத்துறை அதிகாரிகள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் நான் காவல்துறையிடம் எழுப்பினேன். காவல்துறையினரின் மிரட்டல் காரணமாக பத்திரப்பதிவு துறையில் நிகழும் முறைகேடுகள் குறித்து நான் தொடர்ந்து பேசுவேன். பல்வேறு நபர்கள் ஆதாரங்களை எனக்கு அளித்து கொண்டே இருக்கிறார்கள். அதனை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன் என தெரிவித்தார். மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் நான் ஆஜராவேன் எனவும் கூறினார்.
தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், 25 ஆண்டுகளுக்குப் பிறகு பத்திரிக்கையாளர் மன்றத்தில் தேர்தல் நடந்திருப்பது வரவேற்க தக்கது. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆனால், வெற்றி பெற்றவர்கள் மீது அரசுக்கு ஆதரவாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுபோல் இல்லாமல் பத்திரிக்கையாளர் நலனை பாதுகாக்க பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
What's Your Reaction?