TVK Vijay: வெளுத்து வாங்கும் மழை... தவெக மாநாட்டுக்கு சிக்கல்... மீண்டும் கேள்வி எழுப்பிய போலீஸார்!
வடகிழக்குப் பருவமழை காரணமாக, விஜய்யின் தவெக மாநாடு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மழையின் தீவிரம் அதிகமாக இருப்பதால், தவெக-வுக்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறை மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.

விழுப்புரம்: விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தவெக மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக இந்த மாநாடு கடந்த மாதம் 23 தேதி நடைபெறும் என சொல்லப்பட்டது. ஆனால், பாதுகாப்பு ஏற்பாடுகள், பார்க்கிங் வசதிகள் உள்ளிட்ட 33 கேள்விகளை, தமிழக வெற்றிக் கழகத்திடம் விழுப்புரம் மாவட்ட காவல்துறை முன் வைத்தது. இதனையடுத்து இந்த கேள்விகளுக்கு தவெக சார்பில் பதில் கொடுக்கப்பட்டாலும், மாநாட்டு தேதியும் ஓத்தி வைக்கப்பட்டது.
அதன்படி வரும் 27ம் தேதி நடைபெறும் தவெக மாநாட்டுக்கு தீவிரமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் தவெக மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் விழாவும் நடைபெற்றது. அதேபோல், விழுப்புரம் மாவட்ட காவல்துறை அதிகாரிகளும், மாநாடு நடைபெறும் இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது மாநாடு மேடை அமைக்கப்படும் இடம் உட்பட, பார்க்கிங் ஏரியாவிலும் போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாகவே தவெக மாநாடு நடைபெறும் வி.சாலை பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. ஆனாலும், மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. தற்போது வடகிழக்குப் பருவ மழையும் தொடங்கிவிட்டதால், மழைப் பொழிவு தீவிரமாக காணப்படுகிறது. இதனால் மாநாடு நடைபெறும் இடம் முழுக்க சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. மழையின் தாக்கம் மேலும் அதிகரித்தால், அங்கு மாநாடு நடைபெறுவது சந்தேகம் என்றே சொல்லப்படுகிறது.
அதேநேரம் தற்போது தவெக மாநாடு குறித்து, விழுப்புரம் மாவட்ட காவல்துறை மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே மாநாடு பற்றி 33 கேள்விகள் கேட்டு, அதற்கு விளக்கம் பெற்றிருந்த நிலையில், தற்போது மேலும் 5 கேள்விகள் காவல்துறை தரப்பில் முன் வைக்கப்பட்டுள்ளது. அதில், வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், மாநாடு நடைபெறும் தேதியில் மழை பெய்தால் என்ன முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என கேட்கப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டில் பங்கேற்கவுள்ள தொண்டர்கள், பொதுமக்களுக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் காவல்துறை கேள்வி எழுப்பியுள்ளது.
அதேபோல், தவெக மாநாட்டில் மொத்தம் 1.50 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாம். அப்படியானால் மழை பெய்தால், அவர்கள் அனைவரும் எங்கே, எப்படி பாதுகாப்பாக அமர வைக்கப்படுவார்கள்.? மேலும் 45 ஏக்கரில் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மழை பெய்தால், அங்கு என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன போன்ற கேள்விகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் தவெக தரப்பில் இருந்து விரைவில் விளக்கம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மழையை தாக்குப்பிடிக்கும் வகையில் பாதுகாப்பு வசதிகள் செய்யப்படுமா? அல்லது தேதி மாற்றப்படுமா? என்பதும் தவெக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






