தமிழ்நாடு

Chennai Rains: சென்னையில் தீவிரமாகும் மழை... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... முக்கியமான அப்டேட்!

சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்யும் என்பதால், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மழைப் பொழிவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Chennai Rains: சென்னையில் தீவிரமாகும் மழை... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... முக்கியமான அப்டேட்!
சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும் நாளையும் தொடர்ந்து மழை அதிகரிக்கும் என்பதால், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்றார். இந்திய பகுதிகளிலிருந்து இன்று தென்மேற்கு பருவமழை விலகி உள்ளதாகவும் அவர் கூறினார்.  

மேலும், அக். 1 முதல் இன்று வரை உள்ள காலக்கட்டத்தில், வடகிழக்குப் பருவமழை 12 செ.மீ பெய்துள்ளதாகவும் இயல்பு அளவு 7 செ.மீ என்ற நிலையில், இது இயல்பை விட 84 சதவீதம் அதிகம் என்றும் குறிப்பிட்டார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நேற்று ஆரஞ்சு அலர்ட் விடப்பட்ட நிலையில், வானிலையில் ஏற்படும் தொடர் மாற்றம் காரணமாக, இன்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார். அதேபோல், சென்னை அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு கன முதல் மிக கனமழையும், ஒரிரு இடங்களில் அதி கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். 

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளதாகவும், 42 இடங்களில் கன மழை பெய்துள்ளதாகவும் கூறிய பாலச்சந்திரன், அடுத்த 4 தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் கூறினார். தமிழ்நாட்டில் 42 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளதாகவும், வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார். இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். 

முக்கியமாக வங்கக் கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் மேகக் கூட்டங்கள், சுமார் 18 கி.மீ. அகலத்திற்கு படர்ந்திருப்பதால், மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளார். இதனிடையே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை (அக். 16) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருநாள் இது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவைக்கும் நாளை (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கவோ அல்லது வீட்டிலிருந்தே பணியாற்றவோ அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் இன்று இரவு கனமழை பெய்யும் என்பதால், அரசு அலுவலர்கள் மாலை சீக்கிரமாக வீடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், ஓ.எம்.ஆர் சாலையில் பெருங்குடி, கந்தன்சாவடி ஆகிய பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதால், அவ்வழியாக செல்லும் பேருந்துகள் SRP, தரமணி, வேளச்சேரி, காமாட்சி மருத்துவமனை, ரேடியல் சாலை வழியாக சென்று துரைப்பாக்கம் சந்திப்பில் மீண்டும் ஓ.எம்.ஆர் சாலையில் தற்காலிகமாக இயக்கப்படுகிறது. 100அடி சாலையில், MMDA காலனி திரு. நகர் அருகில் மழை நீர் தேங்கியுள்ளதால், அவ்வழியே கோயம்பேடு பேருந்து நிலையம் வரை இயங்கும் பேருந்துகள் வடபழனி பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. அதேபோல், ஆவடி, அம்பத்தூரில் இருந்து கிண்டி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையம் வரை மட்டுமே தற்காலிகமாக இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி செல்லும் பயணிகள், தடம் எண் 104C, 104CX ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ள மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.