திருவண்ணாமலை மகாதீபத்தின் போது பக்தர்கள் மலையேறுவது குறித்தான ஆய்வு கூட்டமானது இன்று மாலை திருவண்ணாமலையில் நடைபெற உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழையின் காரணமாக அண்ணாமலையார் கோவிலின் கிரிவலப்பாதையில் மலைச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், திருவண்ணாமலையில் மகாதீபத்தி்ன் போது அன்னதானம் வழங்கக்கூடிய பக்தர்கள் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் அதற்கு மாற்றாக பாக்குமட்டை, வாழை இலை உள்ளிட்டவற்றிள் அன்னதானம் வழங்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் அலுவலகத்தில் திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணிகளை துரிதப்படுத்திடும் விதமாக நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 36 ரோவர் ( DGPS - Rover ) கருவிகளை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். இன்றயை தினம் 36 தனி வட்டாட்சியர்களிடம் 1 கோடியே 83 லட்சம் மதிப்பீலான ரோவர் கருவிகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் ஸ்ரீதர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
இந்த ஆட்சிக்கு பிறகு இறை அன்பர்களுக்கு அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யவும், திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான விருந்து மண்டபங்கள், தங்கும் வசதிகள், கழிப்பறைகள், குளியலறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், வசதி, தங்க ரதம், வெள்ளி ரதம், மரத்தேர் நிறுத்த கூடிய கொட்டாய் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
அதிக பக்தர்கள் கூட இடங்களில் மருத்துவமனைகள் மற்றும் முழுநேர அன்னதான திட்டம் மற்றும் அன்னதான கூடம் மற்றும் சிறப்பு கூட்டம் நடத்தி அதன் முழும் குழுக்கள் அமைத்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் தான் முருகனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக உலக முருகர் மாநாடு நடைபெற்றது. நேற்று ஒரே நாளில் 24 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது.
இதுவரை 6,955 கோடி ரூபாய் அளவிற்கான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. 1,77,968 ஏக்கர் கோயில் நிலங்கள் ரோவர் கருவி மூலமாக அளவீடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே வருவாய் துறை மூலமாக ரோவர் கருவிகளை பெற்று வந்தோம் தற்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பாக இந்த ரோவர் கருவிகள் மூலமாக பணிகள் நடைபெற உள்ளது.
இன்று மாலை திருவண்ணாமலையில் மாவட்ட அமைச்சர் உடன் தீபத்திருவிழா அன்று பக்தர்கள் மலையேறுவது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. அதில் தானும் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து இன்றைய தினமே அது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறினார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனைத்தும் சரியாக நடந்தால் அரசு எதிலும் தலையிடாது என்று கூறிய அமைச்சர், திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்கக்கூடிய பக்தர்கள் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் அதற்கு மாற்றாக பாக்குமட்டை, வாழை இலை உள்ளிட்ட பொருட்களை அன்னதான வழங்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தினார்.