மெனோபாஸுக்குப் பிறகான மனநலப் பிரச்னைகள் - கையாள்வது எப்படி?
பெண்கள் அனைவரும் மெனோபாஸ் என்கிற கட்டத்தைக் கடக்க வேண்டியிருக்கும். அந்த நேரத்தில் உடல் மற்றும் மன ரீதியாக பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனை எப்படிக் கையாள்வது என்பது பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்...
பெண்களுக்கு மாதவிலக்கு முற்றிலுமாக நின்று போகும் செயல்பாடான மெனோபாஸ் நிகழும்போது அவர்கள் உடலில் பல்வேறான ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கின்றன. உடல் ரீதியாக சந்திக்கும் பிரச்னைகளின் எதிரொலியாக மனம் சார்ந்த பிரச்னைகளுக்கும் அந்த நேரத்தில் அவர்கள் ஆளாக நேரிடுகிறது. மெனோபாஸ் என்பது பெண்கள் அனைவரும் எதிர்கொள்ள வேண்டியது என்கையில் அதற்குப் பிறகான மனநலம் சார்ந்த பிரச்னைகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியம். இதனை எப்படிப் புரிந்து கொண்டு மீள்வது என்பதைப் பற்றி உளவியல் மருத்துவர் கார்த்திக் நம்மிடம் விளக்குகிறார்...
‘‘மெனோபாஸுக்குப் பின் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோனின் அளவு குறையும். மூளைக்கும் ஈஸ்ட்ரோஜென்னுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. டோப்பமைன், norepinachirine மற்றும் செரட்டோனின் ஆகிய ஹார்மோன்கள் நரம்பில் சென்று செயல்பட ஈஸ்ட்ரோஜென் தேவைப்படுகிறது. ஈஸ்ட்ரோஜென் இருந்தால்தான் அந்த ஹார்மோன்களை நரம்பு ஏற்றுக்கொள்ளும். அதை prining என்று சொல்வோம். டோப்பமைன் நம்மை மகிழ்ச்சி கொள்ளச் செய்யும் ஹார்மோன். norepinachirine நமக்கு உத்வேகத்தை அளிக்கிறது. செரட்டோனின் அமைதியைக் கொடுக்கிறது. ஈஸ்ட்ரோஜென் குறைபாட்டால் இந்த மூன்று ஹார்மோன்களின் இயக்கமும் தடைபடுவதன் காரணமாக அதன் பயன்களை பெற முடியாமல் போகிறது. இதனால் மகிழ்ச்சி இழத்தல், நிம்மதி இழத்தல், சோர்வடைதல் ஆகிய பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதில் மனச்சோர்வுதான் மிக முக்கியப் பிரச்னை. இதன் விளைவாக எந்த வேலை செய்தாலும் அதிக சிரத்தை எடுத்து செய்வதைப் போலத் தோன்றும், கணவருடன் பேசும்போது கூட மகிழ்ச்சி ஏற்படாது, விபத்துக்கு ஆளாகி விடுவோமோ? கணவர் நம்மை விட்டுப் பிரிந்து சென்று விடுவாரோ? என்பது போன்ற எதிர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும். சம்மந்தமே இல்லாமல் தேவையில்லாதவற்றைப் பற்றியான எண்ணங்களெல்லாம் வரும்.
மொனோபாஸ் ஆன பிறகு தாய்மை அடைவதற்கான தகுதியை இழக்கின்றனர். இது மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தன்னைப்பற்றி மற்றவர்கள் தாழ்வாக நினைப்பார்களோ என்கிற எண்ணம் மேலோங்கும். சுய மதிப்பீடு குறையும். இந்தத் தாழ்வு மனப்பான்மையின் காரணமாக மற்றவர்களைக் குறை சொல்வார்கள். ஏனென்றால் அவர்கள் நம்மை தாழ்வாக எண்ணுவார்களோ என்கிற பதற்றத்தின் வெளிப்பாடு அது. மொனோபாஸ் குறித்த சரியான புரிதல் இங்கு பலருக்கும் இல்லை. அது அடுத்த பருவம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அத்தோடு பாலியல் உறவு முடிந்து விட்டதாக நினைக்கின்றனர். ஆனால் பாலியல் உறவுக்கு முடிவே கிடையாது. 80 வயது வரையிலும் கூட அதற்கான தேவை இருந்து கொண்டே இருக்கும். ஆனால் வயதைக் காரணம் காட்டி இந்த வயதில் இது கூடாது என்றெண்ணி அதில் ஈடுபாடு கொள்ளாமல் இருக்கின்றனர். அந்த எண்ணத்திலிருந்து விடுபட வேண்டும். ஒரு பருவத்திலிருந்து இன்னொரு பருவத்துக்கு செல்லும்போது கடந்து வந்த பருவத்தின் மீதான ஏக்கமும், ஏமாற்றமும் இருக்கவே செய்யும். அது போல்தான் மெனோபாஸும். அதை நேர்மறையான எண்ணங்கள் மூலமே வென்றெடுக்க முடியும். மெனோபாஸ் அடைந்த பிறகு தாய்மையை இழந்து விட்டதாக வருந்தக் கூடாது. நமக்கான தனிப்பட்ட ஆசைகளை நோக்கிய பயணமாய் அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
emptyness syndrome எனும் வாழ்க்கையே வெறுமையாகி விட்டதாக உணர்வார்கள். அவர்களின் உலகம் ஒட்டு மொத்தமாக மாறி விடும். கணவரின் அந்நோந்நியம் குறைந்து விடும். குழந்தைகள் வளர்ந்து வேலைக்கு போய் விடுவார்கள். அப்போது இந்த வெறுமை ஏற்படும். இந்தியக் கலாச்சாரத்தில் குழந்தைகள் விலகி இருப்பதை எதிர்மறையாகப் பார்க்கும் மனநிலை இருக்கிறது. மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் எல்லாமே தனது குழந்தை தனித்து வாழ்வதற்கான திறன் பெற்றதும் பிரிந்து செல்கின்றன. அது ஒரு சுதந்திரம் என்பதைப் புரிந்து கொண்டால் இதற்காக கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. மெனோபாஸுக்கு பின் சந்திக்கும் மன நலப் பிரச்னைகளுக்கு பெரிய அளவில் சிகிச்சை தேவையில்லை. சரியான புரிதலோடு அதை எடுத்துக்கொண்டாலே போதுமானது. உடலியல் ரீதியாக வேண்டுமானால் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். அது பெரிய சிகிச்சையாகவெல்லாம் இருக்காது. அடுத்த பருவத்துக்கு உங்களைத் தயார் படுத்துவதாக இருக்கும்.’’ என்கிறார் கார்த்திக்.
What's Your Reaction?