50 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்.. வருண பகவான் கருணை மழையால் நடந்த மேஜிக்!

Mettur Dam Water Level : மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் இன்னும் 10 நாட்களில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Jul 18, 2024 - 12:00
Jul 19, 2024 - 10:06
 0
50 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்..  வருண பகவான் கருணை மழையால் நடந்த மேஜிக்!
Mettur Dam Water Level

Mettur Dam Water Level : காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. காவிரி ஆற்றில் விநாடிக்கு 50ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு வாரத்தில் 10 அடி உயர்ந்து அணை நீர்மட்டமும் 50 அடியை எட்டியுள்ளது.

காவிரியில் தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீர் வராததாலும், மழை பொய்த்துப்போனதாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது. அதே நேரத்தில் பாசனத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகமாக இருந்ததால் அணை வறண்டது. இதனால் காவிரி டெல்டா பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டுமே திறக்கப்பட்டது.

கடந்த ஆண்டு பருவமழை முற்றிலும் பொய்த்துப்போனதால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் முற்றிலும் நின்று போனது. இதனால் அணை நீர்மட்டம் 40 அடிக்கும் கீழே சரிந்தது. வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுப்படிக்காக மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. காவிரியில் உரிய பங்கு தண்ணீரை திறந்து விட கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்து வந்தது.

இந்த நிலையில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை உரிய நேரத்தில் தொடங்கியதோடு தீவிரமடைந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, பாகமண்டலா, தலைக்காவேரி பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் மளமளவென நிரம்பி வருகின்றன. 

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. காலை 47,415 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 60,748 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபிணி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் காவிரி ஆற்றில் விநாடிக்கு 60,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று காலை கபிணி அணைக்கு நீர் வரத்து 42,829 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 46,649 கன அடியாக உயர்ந்துள்ளது. 

கிருஷ்ண ராஜ சாகர் அணை மற்றும் கபிணி ஆகிய இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 60,748 கன அடியாக அதிகரித்துள்ளது. பிலிகுண்டுவிற்கு விநாடிக்கு 33000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அங்குள்ள அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன. அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 23,989 கன அடியாக   அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம்  44.80 அடியில் இருந்து 50.03 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர்இருப்பு  17.83 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து  வினாடிக்கு  20,910 கன அடியிலிருந்து 23,989 கன அடியாக அதிகரித்துள்ளது.  குடிநீர் தேவைக்காக அணை மின் நிலையம் வழியாக  வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வெளியேற்றப்படும் நீரைவிட, அணைக்கான நீர்வரத்து அதிகமாக உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.  கடந்த மே மாதம் 17ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49.95 அடியாகவும், நீர் இருப்பு 17.78 டிஎம்சியாகவும் இருந்தது.

அதன் பின்னர், 62 நாட்களுக்கு பிறகு, மீண்டும் நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது. அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், நீர்மட்டம் மேலும் உயரும் என நீர்வளத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அடுத்த 10 நாட்களுக்குள் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் எனவும் நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியுள்ளதால் மேட்டூர் அணையின் தண்ணீரை நம்பியுள்ள காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow