2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு.. தமிழ்நாடு அரசு உத்தரவு!
ஐஏஎஸ் அதிகாரிகள் மணிவாசன், அமுதாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகள் மணிவாசன் மற்றும் அமுதாவுக்கு தமிழ்நாடு அரசு கூடுதல் பொறுப்பு வழங்கியுள்ளது. அதாவது தற்போது நீர்வளத்துறை செயலாளராக உள்ள மணிவாசன் ஐஏஎஸ் கூடுதல் பொறுப்பாக விழிப்பு பணி ஆணையர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையர் ஆகிய பணிகளை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் வருவாய் மற்று பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக உள்ள அமுதா கூடுதல் பொறுப்பாக வருவாய் நிர்வாக ஆணையராக பதவி வகிப்பார் என்று தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரி அமுதா தமிழ்நாடு உள்துறை செயலாளராக இருந்து வந்தார். ஆனால் கடந்த மாதம் அவர் அந்த பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு வருவாய் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆட்சியின் பல்வேறு துறைகளில் அமுதா சிறப்பாக பணியாற்றியதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்த பிறகு அமுதா ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
முதல்வர் ஸ்டாலினின் குட் புக்கில் இடம்பிடித்த அவர் அதன்பின்பு உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். ஒரு ஆண்டுக்கும் மேலாக உள்துறை செயலாளராக இருந்த அமுதா அந்த பதவியில் இருந்து திடீரென மாற்றப்பட்டது ஏன்? என்ற கேள்வி எழுந்தது. சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து ஏராளமானோர் உயிரிழந்தனர்.
கள்ளச்சாராயம் விநியோகம் தொடர்பாக அமுதா ஐஏஎஸ்க்கு, காவல்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டதாகவும் ஆனால் இதை அவர் கண்டுகொள்ளவில்லை எனவும் தகவல்கள் பரவின. இதேபோல் தமிழ்நாட்டில் தொடர் கொலைகள் அரங்கேறின. மிக முக்கியமாக பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் தனது வீட்டின் முன்பு நின்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இது தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், சட்டம்-ஒழுங்கை கவனிக்கும் உள்துறை மீது முதல்வர் ஸ்டாலினுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இதன் காரணமாக அமுதா ஐஏஎஸ் உள்துறை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதாக தகவல்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






