TVK Party Flag Issue : தவெக கொடியில் யானையை அகற்ற வேண்டும்.. தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ் புகார்!

Bhujan Samaj Party on TVK Party Flag : ''யானை சின்னத்தை இந்தியா முழுக்க நாங்கள் கொடியிலும், தேர்தல் சின்னமாகவும் பயன்படுத்தி வருகிறோம். நீலக் கொடியும், யானை சின்னமும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளமாகும்'' என்று தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Aug 27, 2024 - 14:52
Aug 27, 2024 - 15:00
 0
TVK Party Flag Issue : தவெக கொடியில் யானையை அகற்ற வேண்டும்.. தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ் புகார்!
Bahujan Samaj Party And TVK Flag

Bhujan Samaj Party on TVK Party Flag : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கினார். கடந்த வாரம் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை விஜய் அறிமுகம் செய்தார். பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கட்சி கொடியை அறிமுகப்படுத்திய விஜய், கட்சியின் பாடலையும் வெளியீடு செய்தார். 

தவெக கொடியின் மேலும் கீழும் சிவப்பு நிறமும், நடுவில் மஞ்சள் நிறமும் உள்ளது. அதேபோல், நடுவில் உள்ள மஞ்சள் நிற பகுதியில், வாகை மலரை இரண்டு போர் யானைகள் வணங்குவது போன்று கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகை மலரை சுற்றிலும் 28 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில், 5 நட்சத்திரங்கள் நீல நிறத்திலும், 23 நட்சத்திரங்கள் பச்சை நிறத்திலும் உள்ளன. 

இந்த கொடி குறித்து தவெகவின் முதல் மாநாட்டில் விளக்கம் அளிக்கப்படும் என்று விஜய் கூறியிருந்தார். தவெக கொடி fevicol லோகோ போன்று இருப்பதாகவும், கேரள அரசு போக்குரத்து கழகத்தின் லோகோ (KSRTC LOGO) உள்ளதாகவும், பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னத்தை அப்படியே காப்பி, பேஸ்ட் செய்துள்ளதாகவும் பல்வேறு தரப்பினர் கிண்டலடித்து வந்தனர். 

இதற்கிடையே தவெக கொடியில் உள்ள யானைகளை அகற்ற வேண்டும் என்று நடிகர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆனந்தன் கோரிக்கை விடுத்து இருந்தார். ''கடந்த 1993ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட யானை சின்னத்தை அசாம், மணிப்பூர் தவிர வேறு எந்த மாநில கட்சிகளும் எந்த வடிவிலும் கட்சி கொடியிலோ அல்லது சின்னமாகவோ பயன்படுத்த கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வந்து அறிவிப்பு வெளியிட்டது. 

இந்த அறிவிப்பு குறித்து தெரியாமல், சகோதரர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியில் இரண்டு யானைகள் இடம் பெற்றிருப்பது விதிகளை மீறும் செயலாகும். மேலும், தேர்தல் காலங்கள் வாக்காளர்கள் மத்தியில் இது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, உடனடியாக தங்கள் கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன். மீறும் பட்சத்தில் இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்க்கொள்ள பகுஜன் சமாஜ் கட்சி தயாராக உள்ளது'' என்று ஆனந்தன் கூறியிருந்தார்.

இந்நிலையில், தவெக கொடியில் உள்ள யானையை அகற்ற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில அலுவலக செயலாளரும், வழக்கறிஞருமான தமிழ்மதி தேர்தல் ஆணையத்தில் கொடுத்த புகார் மனுவில், ''பகுஜன் சமாஜ் கட்சி அம்பேத்கரின் கொள்கைகளை எடுத்துக் கூறி மக்களின் நம்பிக்கையையும், வாக்குகளையும் பெற்று அங்கீகாரம் பெற்ற கட்சியாகும்.

யானை சின்னத்தை இந்தியா முழுக்க நாங்கள் கொடியிலும், தேர்தல் சின்னமாகவும் பயன்படுத்தி வருகிறோம். நீலக் கொடியும், யானை சின்னமும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளமாகும். யானை சின்னம் அம்பேத்கர் தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிட்ட சின்னமாகும். தமிழ்நாட்டில் நடிகர் விஜய் தொடங்கிய புதிய கட்சியின் கொடியில் எங்களின் தேசிய அங்கீகாரம் பெற்ற யானை உருவம் இடம் பெற்றுள்ளது.

இதற்கு சம்பந்தப்பட்டவர்களிடம் பகுஜன் சமாஜ் கட்சி தனது எதிர்ப்பை தெரிவித்தும் விஜய் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார். அரசியல் நாகரீகம் இல்லாமலும், சட்டவிரோதமாகவும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியின் சின்னத்தை தனது புதிய கட்சி கொடியில் பயன்படுத்தி இருக்கும் நடிகர் விஜய் மீது தக்க நடவடிக்கை எடுத்து, அவர்தம் கொடியில் உள்ள எங்கள் யானை உருவத்தை அகற்றி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்க தாங்கள் வழிவகை செய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow