சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு, ஒரு தலைவரும் 14 உறுப்பினர்களும் இருக்கலாம். தேர்வாணையத்தின் தலைவராக 2020ம் ஆண்டில் ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பொறுப்பேற்றார். இவர் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி ஓய்வுப் பெற்றார். இதனையடுத்து ஐஏஎஸ் அதிகாரி முனியநாதன் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்புத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்தாண்டு ஓய்வுப் பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
இதனையடுத்து அதற்கான கோப்பினை ஆளுநருக்கு அனுப்பியது தமிழ்நாடு அரசு. ஆனால் அதற்கு பல்வேறு விதிமுறைகளை சுட்டிக்காட்டிய ஆளுநர் ரவி, சைலேந்திர பாபுவின் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். இதனால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு தலைவர் நியமிக்கப்படாமல் காலியாக இருந்து வந்தது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பதவிக்கு உடனடியாக தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என தொடர்ந்து பலரும் வலியுறுத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து தற்போது ஐஏஎஸ் அதிகாரி எஸ்கே பிரபாகரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும் படிக்க - இடியோடு கொட்டப்போகும் கனமழை.. ஆரஞ்ச் அலர்ட்!
அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் நியமன விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. அது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக தமிழக டிஜிபியாக இருந்து ஓய்வுப் பெற்ற சைலேந்திர பாபுவை, டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. அத்துடன் அதன் உறுப்பினர்களாகவும் 8 பேரை புதிதாக நியமித்து, ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், இந்த பதவிகளுக்கான விண்ணப்பம் குறித்து வெளியிடப்பட்ட விளம்பரம், பெறப்பட்ட விண்ணப்பங்கள், தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின் விவரங்கள், அவர்கள் இறுதி செய்யப்பட்டது எப்படி? நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா..? உட்பட பல்வேறு விவரங்களை ஆளுநர் தமிழ்நாடு அரசிடம் கேட்டிருந்தார்.
இதனையடுத்து, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதோடு, நியமனம் தொடர்பான அறிவிப்புகள் வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இருப்பினும் டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும், வேறொருவரை தலைவராக பரிந்துரைக்குமாறும் தமிழக அரசுக்கு ஆளுநர் கோப்புகளை மீண்டும் திருப்பி அனுப்பியிருந்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
TNPSC தலைவர் நியமனம் #kumudamnews | #kumudamnews24x7 | #kumudam | #TNPSC #chairperson #SKprabakarIAS #TNgovt #RNRavi #TNGovernorRNRavi #MKStalin #Tamilnadu pic.twitter.com/B64HKWGjI2
— KumudamNews (@kumudamNews24x7) August 13, 2024