தவெக மாநாடுக்கு அனுமதி கிடைக்குமா? பங்கேற்கப்போகும் விஐபிக்கள் யார் யார் - புஸ்ஸி ஆனந்த் அப்டேட்

நடிகர் விஜய் கட்சியின் மாநாடு தொடர்பாக கேட்கப்பட்ட 21 கேள்விகளுக்கான பதிலை நேற்றைய தினம் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் வழங்கியுள்ளார். மாநாட்டில் பங்கேற்கப்போகும் முக்கிய பிரமுகர் குறித்த தகவல்கள் குறித்த அப்டேட்கள் வெளியாகியுள்ளன.

Sep 7, 2024 - 10:18
Sep 7, 2024 - 16:25
 0
தவெக மாநாடுக்கு அனுமதி கிடைக்குமா? பங்கேற்கப்போகும் விஐபிக்கள் யார் யார் - புஸ்ஸி ஆனந்த்  அப்டேட்
vijay tvk manadu

தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கியுள்ள விஜய் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கட்சிக்கொடியை அறிமுகம் செய்து வைத்துள்ளார். கட்சிக்கொடியின் நிறமே அவரது கொள்கையை வெளிப்படுத்தியுள்ளது. அதற்கான காரணத்தை தனது முதல் மாநாட்டில் அறிவிக்கப்போகிறார் விஜய். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தவெக மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான அனுமதி கேட்டு காவல்துறையில் மனு அளித்த போது 21 கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கான பதிலை தவெக பொதுச்செயலாளர் விழுப்புரம் டிஎஸ்பி அலுவலகத்தில் வழங்கியுள்ளார்.

மாநாட்டுக்கு தயாராகும் தவெக

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி சாலையில் அக்கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அந்த மாநாட்டிற்கு அனுமதி கோரி கட்சியின் பொதுச் செயலாளர் என் ஆனந்த் விழுப்புரம் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு ஏற்கனவே மனு அளித்திருந்தார். அந்த மனுவை விசாரித்த காவல்துறை இந்த மாநாடு தொடராக 21 கேள்விகள் அடங்கிய  கேள்விகளை தமிழக வெற்றி கழகத்தினுடைய பொதுச் செயலாளரிடம் கேட்கப்பட்டிருந்தது. 

என்னென்ன கேள்விகள்:

 தாங்கள் கொடுத்துள்ள பார்வையில் கண்ட 28.08.2024 ஆம் தேதியிட்ட மனுவில் மாநாடு நடைபெறும் நேரம் குறிப்பிடப்படவில்லை, எனவே, மாநாடு எந்த நேரம் தொடங்கி எந்த நேரம் முடிக்கப்படும்?. மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் விபரம் என்னென்ன? மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள இடத்தின் உரிமையாளர்களிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா? யார் அவர்களிடம் முறையாக அனுமதி பெற்றது?  மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய நபர்களின் பெயர் பட்டியல்.

மாநாடு மேடையின் அளவு என்ன? எத்தனை நாற்காலிகள் மேடையில் போடப்பட உள்ளன? மேடையில் பேசவுள்ள நபர்களின் பெயர் விபரம்..
மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு எவ்வளவு நாற்காலிகள் போடப்படவுள்ளன.

மாநாட்டில் வைக்கப்படவுள்ள பேனர்கள் எண்ணிக்கை மற்றும் அலங்கார வளைவுகளின் விபரம்.  மாநாடு ஏற்பாடு செய்யும் நபர்கள் மற்றும் பந்தல், ஒலிபெருக்கி மற்றும் இதர ஒப்பந்ததாரர்கள் விபரம்.  மாநாட்டில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள்? அதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் விபரம். மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்கள் எந்தெந்த மாவட்டத்திலிருந்து வருவார்கள்? யாருடை தலைமையில் வருவார்கள்? அதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் விபரம் மற்றும் அவர்கள் வரும் வாகனங்களின் வகை மற்றும் எண்ணிக்கை? இருச்சக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் மற்றும் பேருந்துகள் விபரம்.

மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்படுள்ளதா? அந்த இடத்தின் உரிமையாளர் யார்? அவரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா? மாநாட்டில் வாகனங்கள் நிறுத்துமிடங்களில் பாதுகாப்பு பணிக்கு தனியார் பாதுகாவலர்கள் அல்லது தன்னார்வாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்களா? அவர்களின் பெயர் விபரம் மற்றும் சீருடை விபரம்? மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்கள், குழந்தை மற்றும் முதியவர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவுள்ள விபரம். 

மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு செய்யப்படவுள்ள அடிப்படை வசதிகளின் விபரம் மற்றும் வழங்கப்படும் குடிதண்ணீர், பாட்டில் வகையா? அல்லது தண்ணீர் டேங்க் மூலமாகவா?. மாநாட்டிற்கு வரும் நபர்களுக்கு உணவு, பொட்டலங்கள் மூலம் விநியோகிக்கப்படவுள்ளதா? அல்லது மாநாடு நடைபெறும் இடத்தின் அருகே சமையற்கூடம் மூலம் சமைத்து விநியோகிக்கப்படவுள்ளதா.?  மாநாட்டில் தீவிபத்து தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு செய்யப்படவுள்ள விபரம்..  மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதா அவ்வாறு செய்யப்பட இருப்பின் மருத்துவக் குழு மற்றும் ஆம்புலன்ஸின் விபரங்கள்.. 

மாநாட்டில் கலந்து கொள்ள வரும் நபர்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழித் தடங்கள் எத்தனை?  கட்சியின் தலைவர் மற்றும் முக்கிய நபர்கள் விழா மேடைக்கு செல்லும் வழித்தடம் பற்றிய விபரம்.. மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்தும் ஒவ்வொரு இடத்திற்கு உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழித் தடங்கள் எத்தனை?  மாநாட்டிற்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் எங்கிருந்து பெறப்படுகிறது? அதற்கான அனுமதி விபரம்.. என 21 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதனையடுத்து இது தொடர்பான பதில்களை புஸ்ஸி ஆனந்த ஆதாங்களுடனும், ஆவணங்களுடனும் அளித்துள்ளார்.

பதில் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்

இந்த நிலையில் காவல்துறையில் அளிக்கப்பட்ட பதில்கள் குறித்த சில தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில்,மாநாடு நடத்தும் நேரம் - மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை எனவும், மாநாடு மாநாட்டில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள் என்ற கேள்விக்கு, ஆண் பெண் முதியவர் விபரம் ஆண்கள்- முப்பதாயிரம், பெண்கள் 15 ஆயிரம், முதியவர் ஐயாயிரம், குழந்தைகளுக்கு அனுமதி இல்லை, மாற்றுத்திறனாளிகள் இருக்கை 500 எனவும், மாநாட்டு பந்தலை ஜேபி எண்டர்பிரைஸ், நேர் பஜனை கோவில் திருவேற்காடு மெயின் ரோடு பூந்தமல்லி திருவள்ளூர் அமைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மாநாட்டில் பங்கேற்கும் விஐபிக்கள் யார்?

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த் , காவல்துறையினர் கேட்டிருந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து விட்டோம். இரண்டு அல்லது மூன்று நாட்களில் ஆலோசனை செய்து முடிவு சொல்வதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். காவல்துறை அனுமதி கிடைத்தவுடன் தமிழக வெற்றிக்கழக மாநாட்டின் தேதியை கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்" எனக் கூறியிருந்தார். 

தவெக மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அண்டை மாநில முதல்வர்களான, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்பதாக தகவல்கள் வெளியான நிலையில் காவல்துறையினர் அனுமதி கொடுத்த பிறகுதான் மாநாட்டில் யார் யார் பங்கேற்க உள்ளார்கள் என்ற தகவலை விஜய் வெளியிடுவார் என்று கூறியுள்ளார் புஸ்ஸி ஆனந்த்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow