அரசியல்

TVK Vijay: தவெக அரசியல் கட்சியாக அங்கீகாரம்... மாநாடு தேதியை அறிவிக்காத விஜய்..? தொண்டர்கள் குழப்பம்

தமிழக வெற்றிக் கழகத்தை தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியாக அங்கீகரித்துள்ளதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். அதேநேரம் மாநாடு குறித்து எந்த அப்டேட்டும் கொடுக்காதது தவெக தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

TVK Vijay: தவெக அரசியல் கட்சியாக அங்கீகாரம்... மாநாடு தேதியை அறிவிக்காத விஜய்..? தொண்டர்கள் குழப்பம்
தவெக அரசியல் கட்சியாக அங்கீகாரம்

சென்னை: கோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் விஜய், விரைவில் முழுநேர அரசியல்வாதியாக களமிறங்கவுள்ளார். இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், அதன் கொடியையும் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டார். இதனிடையே தவெகவின் முதல் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வரும் 23ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தவெக தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் காத்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநாடு நடைபெறும் தேதி குறித்து அறிவிக்கவில்லை. ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தை தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியாக அங்கீகரித்துள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார். விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கை கொண்டாட்டமே. எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவுமே நாம் இதுவரை காத்திருந்தோம். இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது. 

தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக, கடந்த பிப்ரவரி 2ம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிருந்தோம். அதை சட்டப்பூர்வமாகப் பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தலில் அரசியலில் பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது. இதை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும், திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது. 

மேலும் படிக்க - சுயநலவாதி வெங்கட் பிரபு... அஜித் ரசிகர்கள் ஆதங்கம்!

இச்சூழலில், நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள். தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கான தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம். வெற்றிக் கொடியேந்தி மக்களைச் சந்திப்போம், வாகை சூடுவோம் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகம் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற்றதை, தவெக நிர்வாகிகளும் தொண்டர்களும் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

தவெக மாநாடு தேதி குறித்து விஜய் அறிவிக்காத நிலையில், இதற்கான அனுமதியை காவல்துறை வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் மாநாடு அமைய வேண்டும், குறித்த நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டும் உள்ளிட்ட 33 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி தவெக தலைவர் விஜய் தரப்பில் இருந்து முறையான அறிவிப்புகள் வெளியாகும் என கட்சி நிர்வாகிகள் எதிர்பார்த்துள்ளனர். அதேநேரம் ஏற்கனவே திட்டமிட்டபடி வரும் 23ம் தேதி தவெக மாநாடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.