ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 120 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம்.. உ.பியில் அதிர்ச்சி

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் நடந்த மத வழிபாட்டுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 120ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பல பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்.

Jul 2, 2024 - 21:26
 0
ஹத்ராஸ் கூட்ட  நெரிசலில் சிக்கி 120 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம்.. உ.பியில் அதிர்ச்சி
hathras stampede death

உத்தரபிரதேச மாநிலம் சிக்கந்தராவ் நகரில் போலே பாபா சத்சங்கம் என்ற ஆன்மீக நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 
மத வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரே இடத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடினர். நிகழ்ச்சி முடிந்து வெளியேறும் போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த நிலையில், சரியான முன்னேற்பாடுகள் இல்லாத காரணத்தால் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வருவதில் கடும் தாமதமாகி உள்ளது. அதற்குள் 120 பேர் உயிரிழந்தனர். 

இறந்தவர்கள் ஹத்ராஸ் மற்றும் அண்டை  மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். வெளியேறும் பாதை குறுகியதாக இருந்ததால் இச்சம்பவம் நேர்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.  சிகந்த்ரா மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் பலர் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளதாகவும், மருத்துவமனையில் ஆக்ஸிஜன் இல்லை என்றும் மூத்த மருத்துவர்கள் யாரும் இல்லை என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான பக்தர்கள் உயிரிழந்த செய்தி நெஞ்சை பதற வைக்கிறது. குடும்பத்தினரை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரங்கல் கூறியுள்ள பிரதமர் மோடி, தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரனைக் குழு அமைத்து விசாரிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.  

உத்தரபிரதேச மாநில  முதல்வர் அலுவலகத்தின் சார்பாக வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "ஹத்ராஸ் மாவட்டத்தில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் அவர் வேண்டிக்கொண்டார். காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஏடிஜி ஆக்ரா மற்றும் அலிகார் கமிஷனர் தலைமையில் சம்பவத்திற்கான காரணங்களை ஆய்வு செய்ய அறிவுறுத்தினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow