Smart Cities: 12 புதிய ஸ்மார்ட் சிட்டிகள்... 10 லட்சம் வேலைவாய்ப்பு... தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம்!

நாடு முழுவதும் 12 புதிய தொழில்துறை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Aug 28, 2024 - 21:10
Aug 29, 2024 - 10:19
 0
Smart Cities: 12 புதிய ஸ்மார்ட் சிட்டிகள்... 10 லட்சம் வேலைவாய்ப்பு... தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம்!
12 புதிய ஸ்மார்ட் சிட்டிகள்

சென்னை: தேசிய தொழில்துறை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 12 புதிய ஸ்மார்ட் சிட்டிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் 28 ஆயிரத்து 602 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகவுள்ள இந்த ஸ்மார்ட் சிட்டிகள் மூலம் சுமார் 10 லட்சம் வேலைவாய்ப்பு உருவாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட் சிட்டிகள் கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் அமைக்கப்படவுள்ளன. 

டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பங்கேற்றிருந்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 12 புதிய ஸ்மார்ட் சிட்டிகள் குறித்து தெரிவித்தார். அதன்படி, தேசிய தொழில்துறை தாழ்வார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 12 தொழில்துறை ஸ்மார்ட் சிட்டிகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார். 28 ஆயிரத்து 602 கோடி மதிப்பில் உருவாக்கப்படும் இந்த ஸ்மார்ட் சிட்டிகள், ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடுகளை ஈர்க்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இதன்மூலம், நேரடியாக 10 லட்சம் பேரும், மறைமுகமாக 30 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெறலாம் எனவும் அவர் கூறியுள்ளார். மத்திய அமைச்சரைவை தகவல்களின்படி கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் பொருளாதார வளர்ச்சியில் உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிக்க மிகப்பெரிய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. 

அதேநேரம் இந்த அறிவிப்புகள் தமிழ்நாட்டிற்கு மிகப் பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. அதாவது, உத்தரகண்ட் மாநிலத்தின் குர்பியா, பஞ்சாபில் ராஜபுரா, பாடியாலா, உத்தரப் பிரதேசத்தில் ஆக்ரா, பிரயாக்ராஜ், பீகாரில் கயா, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏய்கி போர்ட் பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டிகள் உருவாகின்றன. அதேபோல், ராஜஸ்தானில் ஜோத்பூர், பாலி, ஆந்திராவில் கோபார்த்தி, ஓரவக்கல், தெலங்கானாவில் ஜாஹீராபாத், கேரளாவில் பாலக்காடு, ஜம்ஷேத்பூர்-புருலியா-அசன்சோல் பகுதியில் ஒன்று என 12 ஸ்மார்ட் சிட்டிகளுக்கான இடங்கள் தேர்வாகியுள்ளன. ஆனால் இதில் ஒன்றுகூட தமிழ்நாட்டில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே சில தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இப்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் தமிழ்நாட்டிற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்நிலையில், 12 ஸ்மார்ட் சிட்டிகளும் மத்திய அரசின் விக்சித் பாரத் இலக்கை அடையும் கொள்கையை ஒத்து அமைந்துள்ளது. ஏற்கனவே எட்டு ஸ்மார்ட் சிட்டிகள் வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையில், தற்போது 12 புதிய ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்கப்படவுள்ளன. இதன்மூலம் இந்தியாவில் தற்போது மத்திய அரசு 20 ஸ்மார்ட் சிட்டிகளை கட்டமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow