பட்டாபிஷேகம்.. விழாக்கோலம் பூண்ட அறிவாலயம்.. துணை முதல்வராவது எப்போது.. உதயநிதி பதில் இதுதான்!

திமுகவின் பவள விழா, முப்பெரும் விழா கொண்டாடிய கையோடு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகாத காரணத்தால் அவரது ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Sep 18, 2024 - 12:16
Sep 18, 2024 - 14:37
 0
பட்டாபிஷேகம்.. விழாக்கோலம் பூண்ட அறிவாலயம்.. துணை முதல்வராவது எப்போது.. உதயநிதி பதில் இதுதான்!
udayanithi stalin as deputy cm

சென்னை: உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதல்வராக அறிவிக்கப்படுவார் என்று பட்டாசுகளுடன் அறிவாலயத்தில் குவிந்த தொண்டர்களும், நிர்வாகிகளுடம் ஏமாற்றமடைந்தனர். தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் விழாக்கோலம் பூண்டிருந்த நிலையில் வழக்கம் போல உதயநிதி ஸ்டாலின் தயாராக வைத்திருந்த பதிலை செய்தியாளர்களுக்கு கூறியுள்ளார்.

என் மகன் ஆகட்டும் என் மருமகன் ஆகட்டும் என் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே இளைஞரணி செயலாளர் ஆக நியமனம் செய்யப்பட்டார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தார். ஒற்றை செங்கலோடு எய்ம்ஸ் மருத்துவமனையை கிண்டல் செய்த பிரசாரம் பரபரப்பாக பேசப்பட்டது.

மக்களவைத் தேர்தலில் திமுக பெற்ற வெற்றி 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் உதயநிதி ஸ்டாலினுக்கு அடுத்த பதவி உயர்வினை பெற்றுத்தந்தது.இதனையடுத்து திருவல்லிக்கேணி சேப்பாக்கம்  சட்டசபை தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. 234 தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்தார் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி எம்எல்ஏவாக வெற்றி பெற்ற உடன் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. 

பல அமைச்சர்களும் உதயநிதிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், முதல்வருக்கு யாருக்கு எப்போது என்ன பதவி கொடுக்க வேண்டும் என்று தெரியும் அவரை தர்மசங்கடப்படுத்த வேண்டாம் என்று கூறினார். அடுத்த சில மாதங்களிலேயே விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. 

முதல்வர் ஸ்டாலின்(CM Stalin) அமெரிக்காவிற்கு செல்லும் முன்பாகவே உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. கடந்த சில மாதங்களுகு முன்பாக இளைஞரணி மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், வதந்திகளை நம்பாதீர்கள் என்று சொன்ன கையோடு, எவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும் என்னுடைய மனதிற்கு மிக நெருக்கமான பொறுப்பு என்பது திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு மட்டும்தான் என்று சூசகமாக பதில் அளித்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக முதல்வர் ஸ்டாலினிடம், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளதே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லை என்று சொன்னார் முதல்வர் ஸ்டாலின். அமெரிக்காவில் இருந்து திரும்பிய ஸ்டாலின் செய்தியாளர்களிடம் நீங்கள் எதிர்பார்த்த மாற்றம் நடக்க வாய்ப்பு உள்ளது வெயிட் அன் ஸீ என்று சொல்லி ஹிண்ட் கொடுத்தார். 

நேற்றைய தினம் திமுக பவளவிழா முப்பெரும் விழாவில் பேசிய  எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்,"உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டாமா? உங்களை பேராசிரியர் அன்பழகன் ஏற்றுக் கொண்டதைப் போல நாங்களும் உதயநிதி ஸ்டாலினை ஏற்றுக் கொள்வோம். காலம் தாழ்த்தாதீர்கள்" என பேசினார். அப்போது மேடையின் கீழ் வரிசையில் அமர்ந்திருந்த அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, அன்பில் மகேஷ் உள்ளிட்டோரும் திமுக தொண்டர்களும் உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இந்த நிலையில் புதன்கிழமையான இன்றைய தினம் துணை முதல்வராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பில் தொண்டர்களும் நிர்வாகிகளும் பட்டாசுகளுடன் குவிந்தனர்.  ஆனால் அது பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனால் தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதியிடம் துணை முதலமைச்சர் குறித்த ஆலோசனை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி, “அப்படியா எனக்கு தெரியவில்லையே. நான் அண்ணா நூற்றான்டு மாளிகையில் இருந்தேன். அறிவாலயம் போகவில்லை. துணை முதலமைச்சர் பதவி குறித்து தொண்டர்கள் தங்கள் விருப்பத்தை கூறிவருகிறார்கள். நேற்று பழனிமாணிக்கம் அவர்கள் திமுக முப்பெரும் விழாவில் இதுகுறித்து பேசியிருந்தார். நான் சொல்வது ஒன்றுதான். எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருப்போம். இது முதலமைச்சரின் தனிப்பட்ட முடிவு. துணை முதல்வர் பற்றி அறிவிப்பு வந்தால் அதுபற்றி பேசுவோம் என்று பதில் கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow