துணை முதல்வர்.. எந்த பதவி கொடுத்தாலும்.. உதயநிதி ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட்

Udhayanidhi Stalin Speech : துணை முதல்வர் என்ற கேள்வி என்னிடம் கேட்கின்றனர். ஆனால் அமைச்சர்கள் அனைவரும் முதல்வருக்கு துணையாக இருப்போம் என்று கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

Jul 20, 2024 - 12:49
Jul 20, 2024 - 13:23
 0
துணை முதல்வர்.. எந்த பதவி கொடுத்தாலும்.. உதயநிதி ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட்
Udayanidhi Stalin Deputy CM

Udhayanidhi Stalin Speech : துணை முதல்வர் என்ற கேள்வி என்னிடம் கேட்கின்றனர். ஆனால் அமைச்சர்கள் அனைவரும் முதல்வருக்கு துணையாக இருப்போம் என ஏற்கனவே பேசி இருக்கிறேன் எந்த பதவிக்கு சென்றாலும் இளைஞர் அணி பொறுப்பு தான் மனதுக்கு நெருக்கமானது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

45 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் திமுக இளைஞர் அணியினர் விழாவில் அத்துறையின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது "திமுகவின் முதல் அணி என்பது இளைஞர் அணி தான். மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தமிழக மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர். 

திமுக இளைஞர் அணியினர் சமூக வலைதளங்களில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். பாஜகவினர் பொய் மட்டுமே பேசி அரசியல் செய்து வருகின்றனர். பிரதமர் மோடி ஆறுமுறை தமிழ்நாடு வந்தபோதும் பாஜகவுக்கு ஏமாற்றம் தான். மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி.  

பிரதமர் மோடி ஆயிரம் முறை தமிழ்நாடு வந்தாலும் பாஜகவால் காலூன்ற முடியாது. அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக தான் இருப்போம். 
பத்திரிகைகளில் சில கிசுகிசுக்கள், வதந்திகள் குறித்து படித்தேன். அதை நம்பி இப்போதே சிலர் துண்டு போட்டு வைக்கின்றனர். நான் பல முறை சொல்லிவிட்டேன். ஏற்கெனவே தலைவர் இதுபற்றி கூறியுள்ளார். அவர் சொல்வதைத்தான் நானும் சொல்கிறேன். 

எந்த பதவி வந்தாலும் இளைஞர்நலன் அணிதான் மனதுக்கு நெருக்கமானது. அதேபோல்தான் எனக்கும். எந்த பதவி கொடுத்தாலும் சிறப்பாக செய்ல்படுவேன். நான் துணை முதல்வர் என வரும் தகவல் வதந்தி. எவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும் என்னுடைய மனதிற்கு மிக நெருக்கமான பொறுப்பு என்பது திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு மட்டும்தான் என்று கூறினார்.

சமூக வலைதள பயிற்சி மூலம் இளைஞர் அணி நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட வேண்டும். திமுக அரசின் திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்ல இளைஞர் அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனையடுத்து உதயநிதியிடம் எந்த பொறுப்புக்கு சென்றாலும் இளைஞரணியை மறக்க மாட்டேன் என பேசினீர்கள், உங்களுக்கான பொறுப்புகள் மாறுகிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு உதயநிதி ஸ்டாலின், பொறுப்புகள் மாற்றம் குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்றார் உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போதே அவர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி எழுந்தது. அப்போது பதில் சொன்ன ஸ்டாலின் என் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று சொன்னார். அடுத்த சில ஆண்டுகளிலேயே அவருக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் எம்எல்ஏவாக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. 

உதயநிதி எம்எல்ஏவாக வெற்றி பெற்ற உடன் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. பல அமைச்சர்களும் உதயநிதிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், முதல்வருக்கு யாருக்கு எப்போது என்ன பதவி கொடுக்க வேண்டும் என்று தெரியும் அவரை தர்மசங்கடப்படுத்த வேண்டாம் என்று கூறினார். அடுத்த சில மாதங்களிலேயே விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. 

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லப்போவதால் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு இன்றைய தினம் பதில் கொடுத்துள்ள உதயநிதி, வதந்திகளை நம்பாதீர்கள் என்று சொன்ன கையோடு, எவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும் என்னுடைய மனதிற்கு மிக நெருக்கமான பொறுப்பு என்பது திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு மட்டும்தான் என்று சூசகமாக பதில் அளித்துள்ளார். அவர் சொல்லியிருக்கும் சூசகமான பதிலில் துணை முதல்வர் பதவி குறித்து ஹிண்ட் கொடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow