Microsoft: 20 மணி மைக்ரோசாஃப்ட் போராட்டத்துக்கு முடிவு... சென்னை விமான நிலையத்தின் தற்போதைய நிலை!

Chennai Airport : மைக்ரோசாஃப்ட் மென்பொருள் சேவை முடங்கியதால் தமிழ்நாடு, இந்தியா உட்பட உலகம் முழுவதும் விமான சேவையில் பெரும் குழப்பம் நீடித்தது. தற்போது மைக்ரோசாஃப்ட் பிரச்சினை முடிவுக்கு வந்ததை அடுத்து சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் மீண்டும் இயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jul 20, 2024 - 12:23
Jul 20, 2024 - 12:33
 0
Microsoft: 20 மணி மைக்ரோசாஃப்ட் போராட்டத்துக்கு முடிவு... சென்னை விமான நிலையத்தின் தற்போதைய நிலை!
Chennai Airport
Chennai Airport : : மைக்ரோசாஃப்ட் செயலிழப்பு காரணமாக நேற்று மதியம் முதல் உலகமே ஸ்தம்பித்தது போல் ஆகிவிட்டது. விமானம், வங்கி உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் விமான பயணிகள் தான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட விமானங்கள் குறிப்பிட்ட நேரத்தில் இயங்க முடியாமல் சிக்கல்களை சந்தித்தன. இதனால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.  
 
குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி விமான நிலையங்களிலும் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டன. மைக்ரோசாப்ட் செயலிழந்தால் விமான பயணிகளின் போர்டிங் பாஸ்களை அதிகாரிகள் கைகளால் எழுதி கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், நேற்று மதியம் முதல் நள்ளிரவு வரை சென்னை விமான நிலையத்தில் 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 60க்கும் மேற்பட்ட விமானங்கள் 2 மணி முதல் 5 மணி நேரம் வரை தாமதமானது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளானர்.  

இந்நிலையில் 2வது நாளாக இன்றும் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தன. சென்னையில் இருந்து வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு புறப்படும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. அதேபோல் சென்னைக்கு வரவேண்டிய 8 விமானங்களும் ரத்தாகின. அதேபோல் சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன், சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய், குவைத், அபுதாபி, தோகா, இலங்கை, அந்தமான் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவேண்டிய 30க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. 
 
தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் முடங்கியதால் விமான பயணிகள் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், அதிகாலை 3 மணியில் இருந்து கையால் போர்ட்டிங் பாஸ் வழங்கும் பணி நிறுத்தப்பட்டு, கணினி முலம் வழங்கப்பட்டன. ஆனால், இணையதள சேவை ஒரே சீராக கிடைக்காமல் விட்டுவிட்டு வந்ததால் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் காலை 11 மணி முதல் மைக்ரோசாஃப்ட் பிரச்சினை முழுமையாக சீரடைந்து விட்டதாகவும், அதன்பின்னர் எந்தவித பாதிப்பும் இன்றி விமான சேவை செயல்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையை தொடர்ந்து மதுரை விமான நிலையத்திலும் இயல்புநிலை திரும்பியுள்ளது. மதுரை விமான நிலையத்தில் மைக்ரோசாஃப்ட் பிரச்சினை காரணமாக நேற்று பெங்களூர் செல்லக்கூடிய இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் மைக்ரோசாஃப்ட் சரியானதை அடுத்து, இன்று காலை சென்னை, பெங்களூரில் இருந்து மதுரை செல்லக் கூடிய விமானங்கள் இயங்கியதாக சொல்லப்படுகிறது. அதேபோல், மதுரை விமான நிலையத்தில் பயணிகளுக்கான போடிங் பாஸ் வழங்கப்பட்டு வருவதாகவும், துபாய் செல்லக்கூடிய ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் செல்லக்கூடிய பயணிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow