எதற்கு இத்தனை சாதி பெயர்கள்?.. இனிமேல் வேண்டாம் - கனிமொழி கோரிக்கை
இனிமேல் இத்தனை ஜாதி பெயர்களோடு பத்திரிக்கை அடிக்காதீர்கள் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை எழும்பூரில் நெல்லை - தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் கட்டிட திறப்பு விழா, காமராஜர் சிலை திறப்பு விழா, தங்கும் விடுதி கட்டிட அடிக்கல் நாட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய கனிமொழி, “கல்விக் கண் திறந்த நம்முடைய பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய சிலையும் திறக்கப்படக்கூடிய இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதிலே பெருமை.. மகிழ்ச்சி. ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது தமிழ்நாடு மட்டும் ஏன் எப்போதும் தனித்து நிற்கின்றது என்று கேட்டார்.
உங்கள் பெயருக்கு பின்னால் ஜாதி இருக்கிறதை வெளிப்படையாக காட்டுகிறீர்கள். ஆனால் நாங்கள் மனிதர்கள். எங்கள் பெயருக்கு பின்னால் தந்தை பெயர் தான் இருக்கும் என்றேன். அதனால் பத்திரிக்கைக்குப் பின்னால் இவ்வளவு ஜாதி பெயரை இனி சேர்க்க வேண்டாம்” என பத்திரிக்கையை சுட்டி காட்டி கோரிக்கை வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்காக அடிக்கப்பட்ட பத்திரிக்கையின் பின்புறத்தில் பெயருடன் ஜாதியையும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை சுட்டிக்காட்டி, “இத்தனை ஜாதி பெயர்களோடு இனி பத்திரிக்கை அடிக்காதீர்கள்” என வேண்டுகோள் வைத்தார். மேலும் பேசிய அவர், “நாம் எல்லோரும் மனிதர்கள், சமமானவர்கள், நாம் எல்லோரும் உழைப்பை நம்பக் கூடியவர்கள் அதனால் இப்படி ஜாதி பெயரை போட வேண்டாம் என அத்தனை பேருக்கும் கோரிக்கை வைக்கிறேன்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், கலைஞர் கருணாநிதி வாழ்ந்த இம்மண்ணில் ஜாதி மதம் என்ற எந்த காழ்ப்புகளும் இருக்கக்கூடாது. தென் தமிழகத்தில் பல்வேறு முதலீடுகளை முதலமைச்சர் எடுத்து வருகிறார். தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து பொருட்களை வாங்கக்கூடிய நிலை இருக்கிறது.
தமிழகத்தில் இருக்கக்கூடிய வியாபாரிகளும், வெளிநாடுகளுக்கும் முதலீடு செய்யக்கூடிய அளவிற்கு நம்முடைய தொழிலை தன்னம்பிக்கையோடு விரிவாக்கிக் கொள்ள வேண்டும். உலகத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய வியாபாரிகள் மற்றவர்களோடு இணைந்து நின்று முதலீடு செய்து காட்ட முடியும் என்ற உறுதியோடு இருக்க வேண்டும்” என்றார்.
What's Your Reaction?