வங்கதேச வன்முறையில் 105 பேர் பலி... நாடு திரும்பும் இந்திய மாணவர்கள்... முதலமைச்சர் ஸ்டாலின் அட்வைஸ்

Bangladesh Protest News in Tamil : வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்துக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து வன்முறை வெடித்ததில் 105 பேர் உயிரிழந்துள்ளனர்.

Jul 20, 2024 - 13:19
Jul 20, 2024 - 14:31
 0
வங்கதேச வன்முறையில் 105 பேர் பலி... நாடு திரும்பும் இந்திய மாணவர்கள்... முதலமைச்சர் ஸ்டாலின் அட்வைஸ்
Bangladesh Protest Update News
Bangladesh Protest News in Tamil : வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்துக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் வன்முறையாக வெடித்ததில் 105 பேர் உயிரிழந்துள்ளனர், 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனால் அங்கு மிகவும் பதற்றமான சூழல் காணப்படுகிறது. 1971ம் ஆண்டில் பாகிஸ்தானில் இருந்து தனிநாடாக பிரிந்தபோது இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது, ஆனால் அது 2018ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தொடர்ந்த வழக்கில், மீண்டும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. 
 
இதனையடுத்து வங்கதேச மக்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளுக்கு நாள் போராட்டத்தின் தீவிரம் அதிகமானதால், வங்கதேசம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை களமிறக்கும் திட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளது. இதனால் போராட்டகாரர்களை ஒடுக்க அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் ராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வங்கதேசத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பி வருகின்றனர். 
 
வங்கதேசத்தில் மருத்துவம் உள்ளிட்ட கல்வி கற்கச் சென்ற மாணவர்களில் பெரும்பாலானோர் உத்தரபிரதேசம், ஹரியாணா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவரும் வடகிழக்கு மாநிலங்களை ஒட்டிய எல்லை பகுதி வழியாக இந்தியாவுக்குள் வந்து சேர்கின்றனர். இவர்கள் தவிர வங்கதேசத்தில் இருக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இந்நிலையில், வங்கதேச போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், தமிழக மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அட்வைஸ் கொடுத்துள்ளார். இதுபற்றி தமிழக அரசு சார்பில் வெளியான அறிக்கையில், வங்கதேசத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக தமிழர்கள் சிலர் தயாகம் திரும்ப இயலாமல் அங்கு சிக்கியிருப்பதாக தகவல்கள் வரப்பெற்றுள்ளன. வங்கதேசத்தில் உள்ள இந்தியத் தூதரகம் அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை கருதி, உள்ளூர் பயணங்களைத் தவிர்க்கவும், அவர்கள் வசிக்கும் வளாகத்திற்கு வெளியே தங்கள் நடமாட்டத்தை குறைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

வங்கத் தேசத்தில் உள்ள தமிழர்களின் விவரங்களை கேட்டு, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அயலகத் தமிழர் நலன், மறுவாழ்வுத்துறை ஆணையரகம் விரைந்து செய்திட வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அயலகத் தமிழர் நலன், மறுவாழ்வுத்துறை ஆணையரகம் இந்திய தூதரகத்தையும், தமிழ் அமைப்புகளையும் தொடர்பு கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வங்கதேசத்தில் உள்ள தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு தயார்நிலையில் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும், வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் குடும்ப உறுப்பினர்கள், தங்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24*7 கட்டணமில்லா உதவி எண்களை தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தொலைபேசி எண்களாக, இந்தியாவிற்குள் - +91 1800 309 3793, வெளிநாடு - +91 80 6900 9900, தொடர்புக்கு - +91 80 6900 9901 ஆகியவையும் அதில் இணைக்கப்பட்டுள்ளது.
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow