ஓராண்டை நிறைவு செய்த காசா போர்..உருத்தெரியாமல் போன காசா… அடையாளங்கள் அழிந்தது எப்படி?!
இஸ்ரேல் போரால், பாலஸ்தீனத்தின் காசா உருத்தெரியாமல் அழிந்து வரும் நிலையில், போரானது ஓராண்டை நிறைவு செய்துள்ளது. காசாவின் அடையாளங்களை இஸ்ரேல் குறிபார்த்து அழித்தது எப்படி? என்பதே இந்த செய்தி தொகுப்பு..
365 கிலோ மீட்டர் சுற்றளவு… 23 லட்சம் மக்கள்… இதுதான் காசாவின் மொத்த மக்கள் தொகை… இதில் 41 ஆயிரம் பேர் உறக்கத்திலும், தப்பித்து ஓடுகையிலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.
ஜபாலியாவில் உள்ள காசாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமில், 12 மீட்டர் விட்ட அளவில் பள்ளங்களை ஏற்படுத்தும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 2 ஆயிரம் குண்டுகள் வீசப்பட்டதில், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
காசாவின் மிகப்பெரிய மசூதியாக அறியப்படும் கிரேட் ஓமரி மற்றும் நகரின் முக்கிய அடையாளங்களான செயிண்ட் போர்பிரியஸ் - செயின்ட் பிலிப் எவாஞ்சலிஸ்ட் தேவாலயங்கள் அடியோடு அழிக்கப்பட்டன. இவ்வாறாக 611 மசூதிகள் காசாவில் முழுமையாக அழிக்கப்பட்டது.
ரெமால் மையப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற காசா இஸ்லாமிய பல்கலைக்கழகம் மற்றும் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகங்களில் ஒரு வகுப்பறை கூட முழுமையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி, காசாவின் 12 பல்கலைக்கழங்களை இஸ்ரேல் அழித்துள்ளது.
காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா, இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளான முதல் மருத்துவமனை ஆகும். ஆயிரக்கணக்கானோர் முகாம் போல இதனை பயன்படுத்திய நிலையில், இரண்டே வாரங்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். சர்வதேச சட்டத்தின்கீழ், மோசமான நோயாளிகள் - குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது போர் குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் 114 மருத்துவமனைகள் செயல்படாத நிலை ஏற்பட்டது.
போரின்போது, காசா பகுதியில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மண்டலமான நெட்ஸாரிம் காரிடார் 4 கிலோமீட்டர் வரை அதிகரித்துள்ளது.
மத்திய மற்றும் தெற்கு காசாவில், ஆரஞ்சு, ஆலிவ், பேரீச்சம்பழங்களை பயிரிடுவதற்கு புகழ்பெற்ற Deir el-Balah விவசாய நிலங்கள், போர்க்களமாக உருமாறியுள்ளன. 60 சதவீத உணவு உற்பத்திக்குத் தேவையான விவசாய நிலங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம்! திட்டம் படைத்த சாதனை இதுதான்!
வடக்கு காஸாவில் 69.3 சதவீதம், காசா நகரில் 73.9 சதவீதம், டெய்ர் எல்-பாலாவில் 49.1 சதவீதம், கான் யூனிஸில் 54.5 சதவீதம், ரஃபாவில் 46.3 சதவீத பகுதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசாவில் வெடிக்காத குண்டுகளால் நிரம்பிய 42 மில்லியன் டன்களுக்கும் அதிகமான குப்பைகளை அகற்ற பல ஆண்டுகள் ஆகலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
What's Your Reaction?