ஆவணியில் துணை முதல்வராகும் உதயநிதி.. ஆடி வெள்ளியில் உறுதிபடுத்திய ராஜ கண்ணப்பன்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவணி மாதத்தில் துணைமுதல்வராக பதவி ஏற்கப்போவதாக உறுதியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அமைச்சர் ராஜ கண்ணப்பன் மேடையிலேயே இதனை பேசியுள்ளார்.

Aug 9, 2024 - 15:12
 0
ஆவணியில் துணை முதல்வராகும் உதயநிதி.. ஆடி வெள்ளியில் உறுதிபடுத்திய ராஜ கண்ணப்பன்
Udayanidhi Stalin Deputy CM

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம் செல்ல உள்ள நிலையில் கட்சியிலும் ஆட்சி அதிகாரத்திலும் மாற்றம் வரப்போகிறது. கடந்த சில மாதங்களாகவே உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்பார் என்று தகவல் வெளியாகி வருகிறது. ஆவணி மாதத்தில் உதயநிதி துணை முதல்வராவார் என உறுதியாகவே கூறியுள்ளார் அமைச்சர் ராஜ கண்ணப்பன்.

திமுக தலைவராகவும் முதல்வராகவும் கருணாநிதி இருந்த போது அமைச்சராக இருந்த மு.க ஸ்டாலின், திடீரென துணை முதல்வரானார். பிறகு செயல் தலைவரானார். அப்போது உதயநிதி அரசியலில் ஈடுபடாமல் சினிமா தயாரிப்பாளராக மட்டுமே இருந்து வந்தார். ஆரம்பத்தில் சினிமா தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்த அவர் அரசியலில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. 

கடந்த  2011ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் திமுக எதிர்கட்சியாக இருந்தது. ஜெயலலிதா மரணம் வரை உதயநிதி ஸ்டாலின் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது தீவிர அரசியலுக்கு வந்த அவர் தான் ஒரு சாதாரண தொண்டன் தான் எனக் கூறி வந்தார். அதனை தொடர்ந்து திமுக போராட்டங்களில் தொண்டர்களோடு தொண்டராக கலந்து கொண்ட அவர் அதன் பிறகு மெல்ல மெல்ல மேடையற்றப்பட்டார். 

நல்லநாள் நேரம் பார்த்து திடீரென கட்சியின் இளைஞர் அணி செயலாளராக நியமனம் செய்யப்பட்ட அவர் 2021 சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் அமைச்சராக பதவியேற்பார் என கூறப்பட்ட நிலையில் அவரது ஆதரவாளர்கள் அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து 2022ஆம் ஆண்டு இறுதியில் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சரானார் உதயநிதி. கடந்த ஓராண்டு காலமாகவே உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு இளைஞர் அணி நிர்வாகிகள் மத்தியில் பேசிய உதயநிதி, எந்த பொறுப்பு கொடுத்தாலும் எனது மனதிற்கு நெருக்கமானது இளைஞரணி செயலாளர் பதவிதான் என்று கூறியிருந்தார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லை என்று கூறினார். 

இந்த நிலையில் ராமநாதபுரத்தில் நடைபெற்ற தமிழ்ப் புதல்வர் திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன், துணை முதல்வர் உதயநிதி என குறிப்பிட்ட நிலையில், திடீரென சுதாரிர்த்துக் கொண்டு “ சாரி சாரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்” என பேசியதோடு, ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு அப்பறம் தான் அப்படி சொல்ல வேண்டும் என்று பேசினார். இதனால் ஆகஸ்ட் 19க்கு முன்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகலாம், அல்லது அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என கூறுகின்றனர் திமுகவினர். 

கடந்த சில வாரங்களாகவே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் வரும் 19ஆம் தேதிக்கு முன்னதாக நல்ல செய்தி வரும் என்கின்றனர் உதயநிதியின் ஆதரவாளர்கள்.துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்கும் பட்சத்தில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 2026 சட்டசபை தேர்தலில் களமிறங்கத் தயாராகி வரும் விஜய்யை எதிர்கொள்ள இப்போதிருந்தே உதயநிதியை தயார் படுத்துகிறார் ஸ்டாலின் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow