ADMK Sellur Raju Reply To DMK Minister TM Anbarasan : சமயநல்லூர் அருகே பரவையில் நடைபெற்ற அதிமுக புதிய உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்றார். அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர் கூறுகையில், ''முதல்வர் ஸ்டாலினுக்கு நாள்தோறும் ஃபோட்டோ ஷூட்டிங் தான். அவர் நடந்து வருவது ரோபோ நடந்து வருவது போல உள்ளது. கூகுள் குட்டப்பா படத்தில் வரும் ரோபோவை போல ஸ்டாலின் நடந்து வருகிறார்.
முதல்வரை கேலி பண்ண விரும்பவில்லை. ஆனால் அவருடைய செயல் உண்மைக்கு புறம்பாக உள்ளது. எனக்குப் பின்பு எனது பதவிக்கு என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் வர மாட்டார்கள் என்று கூறிய முதல்வர், அவரது மகனை இளைஞர் அணி பதவியில் அமர வைத்து பின்பு எம்.எல்.ஏ, அதன் பிறகு விளையாட்டு துறை அமைச்சர் தற்போது துணை முதலமைச்சராக ஆக்க இருக்கிறார்.
திமுகவை பட்டி தொட்டி எங்கும் இன்றைக்கு 50 வயதை கடந்த அனைவரையும் அறியச் செய்தது எம்ஜிஆர். இதை அண்ணாவே கூறியுள்ளார். 1967ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தவுடன், 'எனக்கு மாலை மரியாதை போடுவதை விட ராயப்பேட்டையில் மருத்துவமனையில் உள்ள எனது தம்பி எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு அணிவியுங்கள். இந்த வெற்றிக்கு அவர் தான் காரணம்' எனக் கூறியவர் அண்ணா.
ஆனால் இதையெல்லாம் அறியாத திமுக அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை நடிகர்கள் என்று ஏதேதோ பேசியுள்ளார். எம்.ஜி.ஆர் திமுகவை வளர்த்தது அன்பரசனுக்கு என்ன தெரியும். கலைஞர் கருணாநிதி நடிகர் இல்லையா! காகிதப்பூ கதாநாயகன் தானே கலைஞர். தா.மோ. அன்பரசனுக்கு அரசியலே தெரியவில்லை. எதிர்க்கட்சியை விமர்சனம் செய்யும் வகையில் தன்னுடைய திமுக குடும்பத்தினரையே அமைச்சர் அன்பரசன் திட்டுகிறார்.
முதல்வர் ஸ்டாலின் ஒரு நடிகர். அவங்க அப்பா ஒரு நடிகர். அதிமுக தொடங்கிய பிறகு திமுகவால் அரியணை ஏற முடிந்ததா? எம்.ஜி.ஆர் இருந்தவரை கோட்டை பக்கம் திமுகவினரால் வர முடிந்ததா? இதேபோல் பாஜகவில் தலைவராக இருக்கிறவர் நேற்று முளைத்த காளான். எனக்கு எப்போதுமே அவரை பிடிக்காது. அதிமுக என்னமோ அவரிடம் கூட்டணிக்கு பேசினமாதிரி கூறி வருகிறார்.
'இனிமேல் அதிமுக தலைமை ஏற்க நாங்கள் விரும்ப மாட்டோம். எங்களிடம்தான் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும்' என்கிறார். சீட் கேட்டு அதிமுக பாஜக பக்கம் நிற்க வேண்டிய அவசியமே இல்லை. அண்ணாமலை இருக்கும் வரை பாஜக சாமியாராக தான் போக வேண்டும். 32 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த ஒரே கட்சி அதிமுக தான். அதிமுகவில் இன்றைக்கு கீழே இருக்கிறவர்கள் மேலே வர முடியும். எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் ஆதரவுடன் பதவிக்கு வந்தவர். அண்ணாமலை கொஞ்சம் மரியாதையாக பேச வேண்டும்'' என்று செல்லூர் ராஜு கூறினார். இந்த பேச்சின்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை ஒருசில இடங்களில் செல்லூர் ராஜு ஒருமையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.