'எதற்கெடுத்தாலும் ஆர்.எஸ்.எஸ்.ஸை குறை சொல்வதா?'.. தமிழிசை பரபரப்பு பேச்சு!
''பள்ளிக்கல்வித்துறை அனுமதி கொடுக்காமல் நிகழ்ச்சி நடந்ததா? பள்ளிக்கல்வித்துறை, தலைமை ஆசிரியரை பலி ஆடாக ஆக்குவதற்கு பதிலாக அமைச்சர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்வது பகுத்தறிவுக்கு எதிரானது அல்ல'' என்று தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை: சென்னையில் உள்ள அரசுப் பள்ளியில் மகா விஷ்ணு என்ற நபர் ஆன்மிகச் சொற்பொழிவு நடத்தியதும் பாவம், புண்ணியம், மறுஜென்மம் போன்ற மூடநம்பிக்கை தொடர்பான கருத்தை பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத்திறனாளி ஆசிரியரிடமும் மகா விஷ்ணு மிக கடுமையாக நடந்து கொண்டதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சென்னையில் இன்று பேட்டியளித்தார்.
அப்போது அவரிடம் மகா விஷ்ணு ஏற்படுத்திய சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தமிழிசை, ''தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை முறையாகத்தான் நடைபெறுகிறதா? என்று எனக்கு தெரியவில்லை. பல இடங்களில் மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்ய வைக்கின்றனர். போலி என்.எஸ்.எஸ் முகாம்கள் நடத்தி பாலியல் குற்றங்கள் வரை நடைபெறுகிறது. ஜாதியை வேற்றுமையால் மாணவர்கள் தென்பகுதியில் தாக்கப்படுகிறார்கள்.
ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை செய்வதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்வது, அவர்களுக்கு மரியாதை செய்வது எல்லாம் நமது கலாச்சாரத்தோடு ஒன்றியது. ஒரு சொற்பொழிவு நடைபெற்றதற்கு தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்வதற்கு பதிலாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை பணியிட மாற்றம் செய்திருக்க வேண்டும்.
பள்ளித் தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்தது கண்டிக்கத்தக்கது. பள்ளிக்கல்வித்துறையில் அனுமதி வாங்கிய பிறகு தான் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது. எந்த நிகழ்வை எடுத்தாலும் அதை ஆர்.எஸ்.எஸ் உடன் இணைப்பது தவறானது. ஆர்.எஸ்.எஸ் ஒரு சேவை இயக்கம். அந்த இயக்கத்தின் சேவையை பார்த்துதான் பாஜக கட்சியில் இணைந்துள்ளோம். எதற்கெடுத்தாலும் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு எதிராக மாணவர்கள் போராடினார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
எந்த வழிமுறை மற்றும் விதிமுறை இல்லாமல் பள்ளி கல்வித்துறை செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறை அனுமதி கொடுக்காமல் நிகழ்ச்சி நடந்ததா? பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை இந்த நபர் பார்த்து இருக்கிறாரே, அதற்கு என்ன பதில் சொல்கிறார்கள். முதலாக பள்ளி கல்வித்துறை சரியான பாதையில் செல்கிறதா என்று பதில் சொல்லட்டும்.
பள்ளிக்கல்வித்துறை, தலைமை ஆசிரியரை பலி ஆடாக ஆக்குவதற்கு பதிலாக அமைச்சர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்வது பகுத்தறிவுக்கு எதிரானது அல்ல. இவர்களுக்கு சுயமரியாதை என்றால் என்னவென்றே தெரியாது. வேங்கை வயலில் என்ன ஆனது என்பது குறித்து பிரச்சினை கண்டுபிடித்தார்களா?'' என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?