நூறு ஆண்டுகளுக்குப் பின் திருமுக்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு..ஒரே நாளில் 65 கோவில் கோபுரங்களில் அபிஷேகம்

100 ஆண்டுகளுக்குபின் திருச்சி மாவட்டம், பூர்த்திகோவில் அருள்மிகு திருமுக்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது. பெரியபாளையம் பவானி அம்மன், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் உள்ளிட்ட 65 ஆலயங்களில் நாளைய தினம் குடமுழுக்கு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த 07.05.2021 முதல் 08.07.2024 வரை 1,844 திருக்கோயில்களுக்கு குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன. 9,141 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள மாநில அளவிலான வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Jul 11, 2024 - 15:01
Jul 11, 2024 - 15:14
 0
நூறு ஆண்டுகளுக்குப் பின் திருமுக்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு..ஒரே நாளில் 65 கோவில் கோபுரங்களில் அபிஷேகம்
65 temple kumbabisegam

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்வார்கள். கோபுர கலசங்களில் நடைபெறும் கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்வதும் கோடி புண்ணியத்தை தரும். தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களான சென்னை, திருவான்மியூர், அருள்மிகு பாம்பன் சுவாமிகள் திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில், திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி, அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் (குரு ஸ்தலம்) திருக்கோயில் உள்ளிட்ட 65 திருக்கோயில்களுக்கு  நாளை (12.07.2024) வெகு விமரிசையாக குடமுழுக்கு நடைபெறவுள்ளது. 

இது தொடர்பாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும், திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், சீகம்பட்டி கிராமம், பூர்த்திகோவில் அருள்மிகு திருமுக்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு சுமார் 100 ஆண்டுகளுக்குபின் வரும் ஜூலை 12 அன்று குடமுழுக்கு நடைபெறுகிறது. இதற்கான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின் இந்து சமய அறநிலையத்துறையில் திருக்கோயில்களின் மேம்பாட்டிற்கும், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தி வழங்கிடும் வகையிலும், பல்வேறு புதிய திட்டங்களும் சேவைகளும், அறிமுகப்படுத்தி செயல்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 07.05.2021 முதல் 08.07.2024 வரை 1,844 திருக்கோயில்களுக்கு குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன. 9,141 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள மாநில அளவிலான வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.5,097 கோடி மதிப்பீட்டிலான 20,166 திருப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, இதுவரை 7,648 திருப்பணிகள் நிறைவுப்பெற்றுள்ளன. இந்த அரசு பொறுப்பேற்றபின் வரலாற்றுச் சாதனைகளாக 400 ஆண்டுகளுக்கு பின் கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு, அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலிலும், 300 ஆண்டுகளுக்கு பின் காஞ்சிபுரம் மாவட்டம், சாத்தனஞ்சேரி, அருள்மிகு கரியமாணிக்க வரதராஜபெருமாள் திருக்கோயிலிலும், 150 ஆண்டுகளுக்கு பின் இராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம் அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயிலிலும், 123 ஆண்டுகளுக்கு பின் திருநெல்வேலி மாவட்டம், அரிகேசவநல்லூர்.


அருள்மிகு பெரியநாயகி சமேத அரியநாத சுவாமி திருக்கோயிலிலும், 110 ஆண்டுகளுக்கு பின் வேலூர் மாவட்டம், வெட்டுவானம், அருள்மிகு திரௌபதியம்மன் திருக்கோயிலிலும், 100 ஆண்டுகளுக்கு பின் 5 திருக்கோயில்களிலும், 90 ஆண்டுகளுக்கு பின் 3 திருக்கோயில்களிலும், 70 ஆண்டுகளுக்கு பின் 2 திருக்கோயில்களிலும், 50 ஆண்டுகளுக்கு பின் 15 திருக்கோயில்களிலும், 40 ஆண்டுகளுக்கு பின் 10 திருக்கோயில்களிலும் வெகுவிமரிசையாக குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, தொன்மையான திருக்கோயில்களில் ஒன்றான திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், சீகம்பட்டி கிராமம், பூர்த்திகோவில், அருள்மிகு திருமுக்தீஸ்வரர் திருக்கோயிலில் திருப்பணிகள் மற்றும் மூன்று நிலை இராஜகோபுரம் அமைக்கும் பணிகள் நிறைவுற்று, சுமார் 100 ஆண்டுகளுக்குபின் இத்திருக்கோயிலுக்கு குடமுழுக்கு வருகின்ற 12.07.2024 அன்று வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான குடமுழுக்கு பணிகள் மற்றும் யாகசாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதியை சேர்ந்த இறையன்பர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு குடமுழுக்கு பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow