நோய் தீர்க்கும் டாக்டர் பெருமாள்… ஆரோக்கியம் தரும் ஹோமங்கள்.. வாலாஜா தன்வந்திரி ஆரோக்கிய பீடம்

வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் தற்போது ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மகா கும்பாபிஷேகம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது.தீராத நோய்களை தீர்க்கும் தன்வந்திரி பகவான் டாக்டர் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். அதற்கான காரணத்தை பார்க்கலாம்.

Jul 4, 2024 - 15:04
Jul 6, 2024 - 18:05
 0
நோய் தீர்க்கும் டாக்டர் பெருமாள்… ஆரோக்கியம் தரும் ஹோமங்கள்.. வாலாஜா தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
Dhanvantri arokya peedam

'ஓம் நமோ பகவதே வாஸுதேவாய தந்வந்தரயே அம்ருதகலச ஹஸ்தாய ஸர்வாமய விநாசநாய, த்ரைலோக்ய நாதாய ஸ்ரீமகா விஷ்ணுவே நம'  ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கியப் பீடத்தில் இந்த மந்திரத்தைக் கூறி, பிணி தீர்க்கும் ஸ்ரீதன்வந்திரி பகவானை வணங்கி, தங்களது நோய்கள் பூரணமாக  குணமாக வேண்டுமென பிரார்த்தனை செய்கின்றனர் பக்தர்கள்.

தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்தை எடுப்பதற்காக பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து அமிர்த கலசத்துடன் வெளிப்பட்டவரே ஸ்ரீதன்வந்திரி பகவான் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்ரீதன்வந்திரி பகவான், பழங்கால ஆயுர்வேத மருத்துவ முறையை உலகுக்கு அளித்தவர். இதனால் மருத்துவத்தின் கடவுளாகப் போற்றப்படும் ஸ்ரீதன்வந்திரி பகவான் அவதரித்த `தந்தேராஸ் தினம்' தேசிய ஆயுர்வேத தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

வாலாஜாபேட்டையிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ளது ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம். இங்கு ஸ்ரீதன்வந்திரி பகவான் தனி சந்திதியில் காட்சியளிக்கிறார். சங்கு, சக்கரம், மூலிகைகள், அமிர்த கலசம் ஆகியவற்றை தனது நான்கு திருக்கரங்களில் ஏந்தியவராகக்  காட்சியளிக்கும் தன்வந்திரி பகவான், டாக்டர்கள் அணிந்திருக்கும் ஸ்டெதாஸ்கோப்பையும் அணிந்து, நோய் தீர்க்கும் கோரிக்கையுடன் வருவோருக்கு வரம் அருள்கிறார்.

சைவம் (சிவன்), வைணவம் (திருமால்), கௌமாரம் ( முருகன்),  காணபத்தியம் (விநாயகர்),  சௌரம் (சூரியன்), சாக்தம் (சக்தி) என ஷன்மதப் பீடமாகத் திகழும் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம்,  பிரம்மா, விஷ்ணு, சிவன் என திருமூர்த்தி ஸ்தலமாகவும் விளங்குகிறது. ஏறத்தாழ 46 லட்சம் பக்தர்களால், 13 மொழிகளில் எழுதப்பட்ட 54 கோடி லிகித மந்திரங்களின் மேல் அமைக்கப்பட்ட பீடத்தில் கம்பீரமாய்க் காட்சியளிக்கிறார் மூலவர் ஸ்ரீதன்வந்திரி பகவான். அதுமட்டுமல்ல, மொத்தம் 98 சந்நிதிகளில் பல்வேறு தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர். 

பாதாள ஸ்வர்ண சனீஸ்வரர், பஞ்சமுக வாராஹி, 21 அடி உயர கல்கருடன்,  லஷ்மி கணபதி, பாலமுருகன், சூரிய-சந்திரன், செந்தூர ஆஞ்சநேயர்,  முனீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, வாஸ்து பகவான், மகிஷாசுரமர்த்தினி, பிரத்யங்கிரா தேவி, வாசவி கன்னிகா பரமேஸ்வரி, அஷ்டநாக கருடன், கார்த்த வீர்யாஜுனர், சுதர்சனாழ்வார், பால ரங்கநாதர், பட்டாபிஷேக ராமர்,  கஜலட்சுமி, ஆரோக்கிய லட்சுமி, சத்ய நாராயணர், லட்சுமி நரசிம்மர், வாணி சரஸ்வதி, ராகு-கேது, நவநீத கிருஷ்ணர், சொர்ண ஆகர்ஷ்ண பைரவர், மரகதேஸ்வரர், மரகதாம்பிகை, காலபைரவர், மணிகண்டன், அன்னபூரணி, கார்த்திகை குமரன், காயத்ரி தேவி, தத்தாத்ரேயர், லட்சுமி ஹயக்கிரீவர், சஞ்சீவி ஆஞ்சநேயர் உள்ளிட்டோர் இங்கு அருள்பாலிக்கின்றனர்.

அதுமட்டுமல்ல,  ராகவேந்திரர், புத்தர், மகாவீரர், குருநானக், காஞ்சி மகா பெரியவர், தங்க பாபா, சூரிய பாபா, வள்ளலார், ரமணர், குழந்தையானந்த மகா ஸ்வாமிகள்,  சேஷாத்ரி சுவாமிகள், வேதாந்த தேசிகர், அவதாரா பாபா, ராமகிருஷ்ண பரமஹம்சர், அகஸ்தியர்,  வீர பிரம்மங்காரு, அத்ரி மகரிஷி பாதம், நவகன்னிகைகள், அத்திமர வடிவில் அனுசுயா தேவி, அஷ்டதிக் பாலகர்கள், பாரத மாதா ஆகியோரும் தனித்தனி சந்நிதிகளில் காட்சியளிக்கின்றனர். மேலும்,   468 சித்தர்கள் லிங்க வடிவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் உரிய மூலிகைச் செடிகள், பூச் செடிகள், பழச் செடிகள் கொண்ட மூலிகை வனத்தில் இருந்து கிடைக்கும் சமித்துகள், ஹோமங்களில் சேர்க்கப்படுகின்றன. அதேபோல, இங்குள்ள துளசிமாடத்தில் 51 ராகவேந்திரர் மடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட ம்ருதி (மண்) சேர்க்கப்பட்டுள்ளது.

பல கோடி கடுக்காய்கள்:

`ஹோமமே ஷேமம், யாகமே யோகம்' என்ற நோக்கில் ஆண்டின் 365 நாட்களும் இங்கு பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. `யக்ஞபூமி' என்று அழைக்கப்படும் ஸ்ரீதன்வந்திரி பீடத்தின் முக்கிய அடையாளமாக, 24 மணி நேரமும் அணையாத யாகசாலை  திகழ்கிறது.  பிணி தீர்க்கவும், ஆரோக்கியம் மேம்படவும் பல்லாயிரக்கணக்கான யாகங்கள் செய்யப்பட்டுள்ளன. 1,000-க்கும் மேற்பட்ட சண்டி யாகங்கள், ஒரு லட்சம் நெல்லிக் கனிகளால் ஸ்ரீகனகதாரா யாகம், 1.30 லட்சம் லட்டுகளைக் கொண்டு லட்சுமி துர்க்கை யாகம், ஒரு லட்சம் தாமரைப் பூக்களைக் கொண்டு ஸ்ரீஅஷ்டலஷ்மி சமேத லட்சுமி நாராயணர் ஹோமம், 10 லட்சம் ஏலக்காய்களைக் கொண்டு ஸ்ரீலட்சுமி ஹயக்கிரீவர் ஹோமம் உட்பட ஏராளமான ஹோமங்கள் நடத்தப்பட்டுள்ளன.ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் அர்ச்சனையோ, தேங்காய் உடைப்பதோ கிடையாது. சுக்கு, வெல்லம், தைலம்தான் பிரசாதமாகத் தரப்படுகிறது.

இந்த ஆரோக்கிய பீடத்தின் நிறுவனர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளிடம் பேசியபோது "புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எனது தாய் கோமளவல்லி, மரணப் போராட்டத்தின்போது 'நான் அடைந்த துன்பம் இனி யாருக்கும் வரக்கூடாது. அதற்காக ஏதாவது செய்' என்று கேட்டுக் கொண்டார். எனவே தான், நோய்களைத் தீர்க்கும் ஸ்ரீதன்வந்திரி பகவானை மூலவராகக் கொண்டு இந்த ஆரோக்கியப் பீடத்தை தொடங்கினேன். இங்கு வேண்டிக் கொண்ட பல்லாயிரக்கணக்கானோர், ஸ்ரீதன்வந்திரியின் அருளால் நோய் குணமடைந்ததாகத் தெரிவித்துள்ளனர். உலகமெங்கும் உள்ள பக்தர்களின் நோய்களைத் தீர்க்கப் பிரார்த்திப்பதும், யாகங்கள் செய்வதுமே இந்தப் பீடத்தின் நோக்கம். இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தெய்வங்கள் சுமார் 10 லட்சம் கிலோமீட்டர் தொலைவுக்கு யாத்திரை சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளன" என்றார்.

வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் தற்போது ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மகா கும்பாபிஷேகம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.  உடல் நலன், மன நலன் வேண்டுவோருக்கு அருள்புரியும் `டாக்டர்' பெருமாளான ஸ்ரீதன்வந்திரி பகவானை தரிசித்து, முழு ஆரோக்கியம் பெற விரும்புவோர் இந்த ஆரோக்கியப் பீடத்தை நாடிச் செல்வதில் வியப்பு ஏது!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow