பிரதமர் மோடியை சந்தித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்... தடபுடல் விருந்துடன் அடுத்த கொண்டாட்டம் ஆரம்பம்
டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தனி விமானத்தில் டெல்லி திரும்பியதை அடுத்து, பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
டெல்லி: 17 ஆண்டுகளுக்குப் பின்னர் உலகக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. ஜூன் 29ம் தேதி வெஸ்ட் இண்டீஸின் பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்ற பைனலில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதின. இதில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. இதனால் கபில்தேவ், தோனியை தொடர்ந்து உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் என்ற பெருமையை பெற்றார் ரோஹித் ஷர்மா. இந்திய அணியின் வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
அதேநேரம், இந்த உலகக் கோப்பை தொடருடன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அதேபோல் பயிற்சியாளர் டிராவிட்டும் தனது பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதனிடையே பார்படாஸில் புயல், மழை காரணமாக விமானங்கள் இயக்க முடியாமல் போக, இந்திய வீரர்கள் தயாகம் திரும்ப முடியாமல் வெஸ்ட் இண்டீஸிலேயே தங்கியிருந்தனர். இதனையடுத்து அவர்களை தனி விமானத்தில் அழைத்து வர இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.
அதன்படி, நேற்றிரவு பார்படாஸில் இருந்து டெல்லி புறப்பட்ட இந்த வீரர்கள் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் கூடியிருந்த ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர். இதனையடுத்து ஐடிசி நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த இந்தியன் அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்திக்க அவரது இல்லம் சென்றனர். அவர்களை வரவேற்ற பிரதமர் மோடி, உலகக் கோப்பை அனுபவங்களை கேட்டறிந்தார். அதன்பின்னர் வீரர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட மோடி, அவர்களுக்கு விருந்தளித்தார். பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் அங்கிருந்து மும்பை கிளம்பினர்.
இன்று மாலை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள பாராட்டு விழாவில் இந்திய வீரர்கள் கவுரவிக்கப்படவுள்ளனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் வீரர்கள் உட்பட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?