Rohit Sharma Bowling in IND vs Sri Lanka 2nd ODI Match : இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி, கொலும்பிவில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 9 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் கமிந்து மெண்டிஸ் தலா 40 ரன்களும், துனித் வல்லெலகே 39 ரன்களும், குசல் மெண்டில் 30 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை, அக்ஷர் பட்டேல் மற்றும் மொஹமது சிராஜ் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஒரு கட்டத்தில் 35 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்திருந்த இலங்கை அணி, கடைசி 15 ஓவர்களில் 104 ரன்கள் குவித்தது.
இதில், ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீசியது தான். அவர் 2 ஓவர்கள் வீசி 11 ரன்களை விட்டுக்கொடுத்தார். அதேபோல, முதல் ஒருநாள் போட்டியிலும், சுப்மன் கில் ஒரு ஓவர் வீசி 14 ரன்கள் விட்டுக்கொடுத்து இருந்தார்.
முன்னதாக, இலங்கைக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றது. கடைசி 2 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. ஆனால், அப்போது இந்திய அணி வித்தியாசமான முடிவை எடுத்தது.
19ஆவது ஓவரை வீச ரிங்கு சிங் அழைக்கப்பட்டார். அவர் அந்த ஓவரில் 46 ரன்களில் குசல் பெராரவையும், ரமேஷ் மெண்டிஸையும் (3) வெளியேற்றியதோடு 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். 6 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரை சூர்யகுமார் யாதவ் வீசினார். அவர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
கவுதம் கம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதும் பரீட்சார்த்த முறையில், இந்திய அணி செயல்படுவதாக தெரிகிறது. டி20 போட்டியில், ரிங்கு சிங் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீசினர். ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் பந்துவீசி உள்ளனர். விட்டால், விக்கெட் கீப்பரையும் பந்துவீச சொல்லுவார்கள் போல என்று நெட்டிசன்கள் காமெடியாக விமர்சித்து வருகின்றனர்.