Vaiko on Armstrong Murder Case : மதிமுகவின் 30வது பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “மதிமுக 30வது பொதுக்குழு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை வழங்கி இருக்கிறது. இந்த கூட்டணிக்கு 40க்கு 40 என தமிழக, புதுவை வாக்காளர்கள் வழங்கி உள்ளனர்.
இந்தியா கூட்டணியை முன்னெடுத்துச் செல்ல திமுக கூட்டணிக்கு அதற்கான தகுதி இருக்கிறது. தெற்கில் இருந்துதான் தலைமை வரவேண்டுமோ என்று சொல்லும் அளவிற்கு வெற்றி பெற்றுள்ளது. 2026 தேர்தலிலும் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும்.
இந்த தேர்தலில் மதிமுக திருச்சி எம்.பி தொகுதியில் துரை வைகோ போட்டியிட்டு 3,13,094 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதில், திமுகவின் பங்கு பெரிய அளவில் உள்ளது. அமைச்சர்கள் நன்றாக வேலை செய்தார்கள். ஒரு சின்னத்தை 10 நாட்களுக்குள் மக்களுக்கு கொண்டுபோய் சேர்த்துள்ளோம். திருச்சியில் வெற்றி பெற்றது புத்துணர்வை ஏற்படுத்தி உள்ளது.
பட்ஜெட் ஒரு கானல் நீராக தான் இருக்கிறது. ஓரவஞ்சகமாக மத்திய அரசு செயல்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அள்ளி அள்ளி தருகிறார்கள். ஆனால் இங்கு இருந்து செல்லும் மசோதாக்களைக் கூட நிறைவேற்றாமல் வைத்துள்ளனர். இந்த ஓரவஞ்சன போக்கு கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மீனவர்கள் பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும். தமிழக மீனவர்களும் இந்திய பிரஜ்ஜைகள் தான் என்பதை மத்திய அரசு மறந்துவிட்டது. மேகதாது அணை கட்டப்போவதாக சித்தராமையா கூறியுள்ளார். பட்ஜெட் அறிக்கையிலும் ஒதுக்கி உள்ளனர். நடுவர் மன்ற தீர்ப்புக்கு விரோதமாக அவர்கள் கூறியுள்ளனர்.
பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தி பார்க்கலாம் என கூறியதாக சொல்லப்படுகிறது. பேச்சுவார்த்தை கூடவே கூடாது. அமைச்சர் துரைமுருகன் சொல்லுவது போல் பேச்சு வார்த்தைக்கு ஒப்பு கொள்வது தற்கொலைக்கு சமம்.
அதிமுக ஆட்சியிலும் கொலைகள் நடக்கத்தான் செய்தன. அந்த போக்கு தொடர்ந்து நடந்து வரும் நிலையில் அதை தடுக்க அரசு உரிய முடிவை எடுக்கும். அரசியல் தலைவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். கொலைகள் நடப்பது நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருக்கிறது. அரசு நடவடிக்கை எடுத்தாலும் கூலிக்கு கொலை செய்பவர்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். திமுக அரசு போதைபொருள் தடுப்புக்கு நடவடிக்கை எடுக்கிறார்கள். அவர்கள் வெற்றிபெற வேண்டும்.
பாமக வன்னியர்கள் இட ஒதுக்கீடு கோருவது குறித்து நான் கருத்துக்கூற முடியாது. அவர்கள் கட்சிக்கான கொள்கையோடு இருக்கிறார்கள். வன்னியர் இட ஒதுக்கீட்டில் திமுக நியாயமாகவும், நடுநிலையோடும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. அருந்ததியர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு கிடைத்தது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி.
ஓரவஞ்சகமாக நடப்பதுதான் மத்திய அரசின் வேலை. கேரளாவில் வரலாறு காணாத வகையில் சம்பவம் நடந்துள்ளது. கேரள நிலச்சரிவுக்கு கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.