கள்ளச்சாராயம் மீண்டும் விற்பனை.. விழுப்புரத்தில் ஒருவர் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் கள்ளச்சாராயம் குடித்து இன்று உயிரிழந்துள்ளார். கள்ளக்குறிச்சியில் 65 பேர் உயிரிழந்த சோக சம்பவம் மறைவதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய மரணம் நிகழ்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Jul 4, 2024 - 15:29
 0
கள்ளச்சாராயம் மீண்டும் விற்பனை.. விழுப்புரத்தில் ஒருவர் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
Vilupuram Kallasarayam death

விழுப்புரம் மாவட்டம் திருவெண்னைய்நல்லூர் அருகே உள்ள டி. குமாரமங்கலத்தை சார்நத ஜெயராமன் என்பவருக்கு அதே பகுதியை சார்ந்த முருகன் என்பவர் புதுச்சேரி மாநிலமான மடுக்கரை பகுதியிலிருந்து பாக்கெட் சாராயம் வாங்கி வந்து கொடுத்துள்ளார். அதனை ஜெயராமன், முருகன், சிவச்சந்திரன் ஆகியோர் குடித்துள்ளனர். பாக்கெட் சாராயம் குடித்த ஜெயராமன் உள்ளிட்ட மூவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது.

இதனை அடுத்து, உடனடியாக அவர்களது உறவினர்கள் மூவரையும் அருகில் உள்ள இருவேல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சையாக முண்டியம்பாக்கம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட ஜெயராமன் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். ஜெயராமன் உயிரிழந்ததால் பாக்கெட் சாராயம் வாங்கி வந்து கொடுத்த முருகனை திருவெண்ணெய்நல்லூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், "ஜெயராமன், முருகன் மற்றும் சிவச்சந்திரன் ஆகிய மூவரும் புதுச்சேரியில் இருந்து வாங்கி வந்த கள்ளச்சாராயத்தை குடித்ததாக தெரியவந்துள்ளது. இவர்கள் மூன்று பேரில் புதுச்சேரியில் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி வந்தது முருகன் தான் என்பதும் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில், முருகன் மீது வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இதற்கிடையில் தான், சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இது குறித்தும் விசாரணை நடத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் அண்மையில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி 65 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் போலீசார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் முக்கிய குற்றவாளிகள் 5 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். 

கள்ளச் காரியத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் விற்றால் ஆயுள் தண்டனையுடன் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் சுவடு மறைவதற்குள் மற்றுமொரு கள்ளச்சாராய மரணம் நிகழ்ந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன.

சம்மந்தப்பட்ட இடத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்ட காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்டு, அதிமுக ஐடி விங் சார்பில் சுட்டிக்காட்டிய பிறகும், இந்த விடியா திமுக அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவாகவே இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணமும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரமும் கண்ட பிறகும் எந்த பாடமும் நீங்கள் கற்றுக்கொள்ளவில்லையா திரு. ஸ்டாலின் அவர்களே? உங்கள் விடியா அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிப்பதற்குள் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோவது? கள்ளச்சாராய மரணங்கள் தொடர்ந்து விழுப்புரம் சரகத்தில் நடைபெறுவதற்கு காரணமான நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம் என்று பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow