Krishna Jayanthi 2024 : கிருஷ்ண ஜெயந்தியன்று படைக்க வேண்டிய பொருட்கள்..... பூரண அருள் நிச்சயம் கிடைக்கும்!
Krishna Jayanthi 2024 : மகா விஷ்ணுவின் 9வது அவதாரம்தான் கிருஷ்ணர். இவர் அவதரித்த நாள் கிருஷ்ண ஜெயந்தி என்றும் அவர் கோகுலத்தில் அவதரித்ததால் இந்நாளை கோகுலஷ்டமி என்றும் கூறப்படுகிறது. தற்போது கிருஷ்ண ஜெயந்தி வருகிற 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் கிருஷ்ணருக்கு விருப்பமான பொருட்களை படைத்து வழிபட்டால் அவரின் முழு அருள் பெற்று வாழ்வு சிறக்கும் என்பது நம்பிக்கை.
கிருஷ்ணருக்கு விருப்பமான பொருட்கள்:
மலர்கள்: கிருஷ்ணரின் பொற்பாதங்களுக்கு மலர்களை அர்ப்பணிப்பது உங்களுக்கு அவரது ஆசியை பெற்று தரும். அதை சாதாரணமாக சமர்ப்பிக்காமல் 3 அல்லது 3இன் மடங்கு (3,6,9..) எண்ணிக்கையில் அர்ப்பணம் செய்ய வேண்டும். பூக்களின் காம்புகள் பகவானை நோக்கும்படி வையுங்கள். தாழம்பூ, சந்தனம், மல்லிகை, சம்பா, சாய்வாலா, ஆம்பர் போன்ற நறுமணம் உடைய ஊதுபத்திகளை பயன்படுத்தினால் கிருஷ்ணரின் மனம் குளிர்ந்து உங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பார் என்பது ஐதீகம்.
துளசி: கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான சில பொருட்கள் என்னவென்று அவரே பகவத் கீதையில் வெளிப்படுத்தியிருப்பார். அதன்படி பார்க்கும்போது தூய துளசி இலை, 1 புஷ்பம், ஒரு உத்தரணி தீர்த்தம் ஆகியவை பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. மனம் நிறைந்த பக்தியோடு இவற்றை படைத்தால் கிருஷ்ணர் அதை ஏற்று கொள்வார் என்பது நம்பிக்கை. அதுவும் துளசியை அர்ப்பணம் செய்வதால் உங்களுடைய பொருளாதார பிரச்சனைகள் நீங்கி செல்வம் செழிக்கும் எனக்கூறப்படுகிறது.
மயிலிறகு: கிருஷ்ணரின் முக்கிய அடையாளமாகப் பார்க்கப்படுவது அவரது கிரீடத்தில் இருக்கும் மயிலிறகுதான். கண்ணனை நினைத்துக் கண்களை மூடினால் நமக்குத் தோன்றும் இரண்டு விஷயங்கள் மயிலிறகும் புல்லாங்குழலும்தான். பொதுவாக மயிலிறகு தெய்வீகம் நிறைந்ததாக கருதப்படுகிறது. இந்த மயிலிறகு நேர்மறையான சக்தியை ஈர்த்து கொள்ளும் பண்பு கொண்டது. கிருஷ்ணருக்கு விருப்பமான இந்த மயிலிறகை பூஜையில் வைத்து வழிபட்டால் பூரண அருள் கிடைக்கும்.
அவல்: குசேலர் அளித்த பிடி அவலுக்காக, கிருஷ்ணர் அவருக்கு அளவில்லாத செல்வங்களை அள்ளி கொடுத்தார் என புராணங்கள் சொல்கின்றன. இதனால் கிருஷ்ண ஜெயந்தியன்று வைக்கப்படும் நைவேத்தியங்களில் அவல் மிக முக்கிய இடம் பிடிக்கிறது. கிருஷ்ண ஜெயந்தியன்று வீட்டில் உள்ள அவலை பயன்படுத்தாமல் ஒரு பிடியாவது கடையில் புதிதாக வாங்கி அதை அப்படியேவோ அல்லது பாயாசமாகவோ படைக்கலாம். இதனை கண்ணனுக்கு படைத்து வீட்டுக்கு அருகே உள்ள குழந்தைகளுக்கு கொடுத்தாலும் இன்னும் புண்ணியம் கிடைக்கும்.
லட்டு: கிருஷ்ண ஜெயந்தி(Krishna Jayanthi 2024) நைவேத்தியங்களில் காரங்களை விட இனிப்பு வகைகளே அதிகம் இடம்பெறும். விநாயகர் மற்றும் கிருஷ்ணர் வழிபாட்டின் போது சுத்தமான நெய்யினால் செய்யப்பட்ட லட்டு அவசியம் இடம்பெற வேண்டும்.
மேலும் படிக்க: எங்க வீட்டு பிள்ளை விஜய்.. புத்திசாலி.. எல்லாத்தையும் சமாளிப்பார் - பிரேமலதா பாராட்டு
வெண்ணெய்: வெண்ணெய், ஆன்மாவுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. அந்த ஆன்மாவில் ஒட்டு இருக்கும் கர்மாக்கள், நீக்கப்பட்டு, சுத்தமான வெண்ணெய் வெளிப்படும். அந்த வெண்ணெய்யை இறைவன் விரும்பி ஏற்றுக் கொள்வார் என்பதே இதன் ஐதீகம். ஒவ்வொரு ஆன்மாவையும் இறைவன் விரும்பி ஏற்றுக் கொள்வதே கண்ணன் வெண்ணெய் திருடி சாப்பிட்டதற்கு பின்னால் இருக்கும் அர்த்தமாகும். நாம் இறைவனிடம் இருந்து விலகி இருந்தாலும், அவர் நம்மை தேடி வந்து திருடி ஏற்றுக் கொள்வார்.
What's Your Reaction?