அண்ணாமலையார் திருக்கோயில்.... புரட்டாசி மாத பூரண பலன்கள்!
புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடியது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். இங்கு புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். புரட்டாசி மாத பௌர்ணமிக்கு கிரிவலம் செல்ல உகந்த நேரம் ஆனது நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கி இன்று மாலை 5.25 மணி அளவில் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று (அக். 16) அதிகாலை 4.30 மணிக்கு ஆகம விதிப்படி கோவில் நடை திறக்கப்பட்டு உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையாருக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். அதனை தொடர்ந்து அதிகாலை முதல் பக்தர்கள் ராஜகோபுரம் நுழைவு வாயில் வழியாக வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்துவிட்டு பின்னர் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்கின்றனர். இதைத்தொடர்ந்து அண்ணாமலையார் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மலர் மாலை அணிவித்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பித்தனர்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ரிஷிகள், தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்ட பலர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவ லிங்கங்கள் பல இருக்கின்றன. இவற்றை வழிபடுவதால் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. அதே போல் திருவண்ணாமலையில் சித்தர்கள் பலரும் இன்றும் சூட்சம உருவில் வசித்து வருவதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. எனவே கிரிவலம் செல்பவர்களுக்கு அவர்களின் ஆசியும் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. கிரிவலம் செல்வதற்கு என தனியான விதிமுறைகள் உள்ளது. இவற்றை சரியாகப் பின்பற்றி, திடமான பக்தியுடன் எவர் ஒருவர் மலையை வலம் வந்து வணங்குகிறாரோ அவருக்கு மட்டுமே கிரிவலம் சென்ற பலனும், அண்ணாமலையாரின் அருளும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
What's Your Reaction?