வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.. பெசன்ட் நகரிலும் திருவிழா கோலாகலம்!
ஆரோக்கிய அன்னையின் புனித கொடி பேராலயத்தில் இருந்து கடற்கரை சாலை வழியாக லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கொடிமரத்தில் ஏற்றி வைக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ''மரியே வாழ்க, மரியே வாழ்க, ஆவே மரியா'' என்று பக்தி கோஷமிட்டனர்.

நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. கீழ் திசை நாடுகளின் லூர்து நகர் என்று அழைக்கப்படும் வேளாங்கண்ணிக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
வேளாங்கண்ணியில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ம் தேதி ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி வரை திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்நிலையில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா திருத்தல திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகமாக தொடங்கியுள்ளது. முன்னதாக, புனித கொடி பேராலயத்தில் இருந்து கடற்கரை சாலை வழியாக லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கொடிமரத்தில் ஏற்றி வைக்கப்பட்டது.
அப்போது அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ''மரியே வாழ்க, மரியே வாழ்க, ஆவே மரியா'' என்று பக்தி கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து கொடியேற்ற சிறப்பு திருப்பலி நடந்தது. வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை கோயிலில் செப்டம்பர் 8ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.
மேலும் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை ஆக வேளாங்கண்ணிக்கு வருகின்றனர். பல லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளதால் வேளாங்கண்ணி முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிவறை வசதியை கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் வேளாங்கண்ணிக்கு 1050 சிறப்பு பேருந்துகளும், தெற்கு ரயில்வே சார்பில் திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதேபோல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள புனித ஆரோக்கிய மாதா திருத்தல திருவிழாவும் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. ஆரோக்கிய அன்னையின் உருவம் பொறித்த கொடி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இன்று மாலை ஏற்றி வைக்கப்பட்டது. கடல் அலை தாலாட்டு மத்தியில் அன்னையில் கொடி பட்டொளி வீசி பறந்து வருகிறது.
இதன்பிறகு பங்குத்தந்தையர்கள் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. சென்னை மட்டுமின்றி புறநகர் மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சிறப்பு திருப்பலியில் பங்கேற்று ஆரோக்கிய அன்னையை தரிசனம் செய்தனர். பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெசன்ட் நகரில் குவிந்துள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. வேளாங்கண்ணியை போன்று பெசன்ட் நகருக்கும் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரை வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






